லண்டன் வழக்கில் தப்பிய இராணுவ அதிகாரி ஹட்டன் வழக்கில் சிக்கினார்!
லண்டனில் இலங்கைத் தூதரகம் முன் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களின் கழுத்தை அறுப்பேன் என சைகை மூலம் எச்சரிக்கை விடுத்த இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹட்டன் கொமர்ஷல் பிரதேசத்தில் தனியார் காணியை உரிமையாளரின் அனுமதியின்றி தனிமைப்படுத்தும் முகாமாக பாவித்தமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு மீதான விசாரணை ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்திரேட் நீதவான் ட்ரோக்ஸி முன்னிலையில் நேற்றுநடந்தது.
இராணுவ தரப்பில் ஆஜராகிய இராணுவத்தின் சட்டப்பிரிவு சட்டத்தரணி மற்றும் அரச சட்டத்தரணி ஜயகித் மாதுரத்ன ஆகியோர், இராணுவத்திற்கு எதிரான வழக்கினை விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது என்று வாதிட்டனர்.
தனியார் காணி உரிமையாளர் சார்பாக சட்டத்தரணி மைத்ரி குணரத்ன பிரசன்னமானார்.
எதிர்தரப்பு வாதத்தை கவனத்திற்கொண்ட நீதிமன்றம், ஆட்சேபனையை எழுத்து வடிவில் வரும் 29ம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட அதேவேளை, வழக்கினை அன்றைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது.
இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக ஆஜராகினார்