November 22, 2024

சிறுபான்மை பொருட்டில்லை:எஸ்பி?

 

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

’19 ஆம் திருத்தத்தின் ஊடாக நாட்டை பிரச்சினைக்குள்ளாக்கினார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன அவை வெறுமனே அரசியல் ரீதியான ஆணைக்குழுக்கள் மாத்திரமே ஆகும்.

அப்போது பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டமையும் அரசியல் நோக்கம் கருதியது. இவ்வாறான சிக்கல் நிறைந்த 19 ஐ நீக்கி 20 கொண்டுவரப்படும். உண்மையாகவே 19 ஆம் திருத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரத்தை குறைத்து ரணிலின் அதிகாரம் கூட்டப்பட்டது. 19​ஐ கொண்டுவர தனிப்பட்ட நோக்கமே காரணம். ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகவே 19 இன் மூலம்  இரட்டை குடியுரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட முடியாது என கூறப்பட்டது.

அது கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியை இலக்கு வைத்து செய்யப்பட்டது. அதாவது ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக செயற்படவும், மைத்திரியின் அதிகாரத்தை குறைத்து ரணில் பலம்பொறுந்தியவராக மாறவே 19ஆது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது. எனவே, அதனை ஒழித்து 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படும். அதற்காகவே மக்கள் பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள். அதேபோல் புதிய தேர்தல் முறையொன்றை மக்கள் கோரியுள்ளனர். ஆகவே ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பர். இதற்கு சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். சிறுபான்மை கட்சிகளே கடந்த மகாண சபை தேர்தல் முறையையும் பிரச்சினையாக்கியுள்ளனர். ஆனப்படியால் சிறுபான்மை கட்சிகள் அதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தும் கூச்சலிட்டும் எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

விக்னேஸ்வரன் இந்து மற்றும் தமிழை உடுத்திக்கொண்டுள்ள  மனிதன். பிரபாகரனின் கொள்கைகளை பின்பற்றும் அவ்வாறானவர்களின் செயற்பாடு பாதகமாகவே முடியும். நாடாளுமன்றத்தில் பிரிவினைவாதம் என்ற விசத்தை பரப்பி மீண்டும் தனிநாடு கோரிக்கையை வலுப்படுத்த அவர் முனைகிறார். அவர் மீண்டும் ஒரு யுத்தத்திற்கே வழிஏற்படுத்துகின்றார். அவரின் கருத்துப்படி சிங்கள அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் பெறும் அவரிடம் இந்த பிழையை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்‘ என்றார்.