கிழக்கில் உருவாகும் சாணக்கியன்?
மக்கள் போராட்டங்களைத் தடுப்பது அந்த இனத்துக்கெதிரான அநீதியே என
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.அத்துடன், போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் விதித்த கட்டளையில் விடுதலைப் புலிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடு எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது என்பது அரசியல் செயற்பாடே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு காணாமால் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மட்டக்களப்பில் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் நடத்துவதற்கு மட்டக்களப்பு நீதிமன்றம் தடை விதித்ததுடன் பொலிஸார் போராட்டத்தை நடத்த விடாமல் தடைபோட்ட நிலையில், அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மக்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்.
இதற்கிடையில், நீதிமன்ற தடை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்திய இரா.சாணக்கியன், ஐ.நா. சபையின் அறிக்கையையும் விபரித்து மக்களின் போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு மும்மொழியிலும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதன்போது, அவர் குறிப்பிடுகையில், “சர்வதேச காணாமல் போனோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையினால் ஒதுக்கப்பட்ட ஒரு நாள். இது இலங்கைக்கு மட்டுமோ அல்லது தமிழ் மக்களுக்கு மட்டுமோ ஒதுக்கப்பட்ட நிகழ்வல்ல.
இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு தடை விதித்துள்ள நீதிமன்றக் கட்டளையில் விடுதலைப் புலிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு விடயத்தை பயன்படுத்தியிருக்கக் கூடாது. ஆகவே இது அரசியலாகும்.
இதனிடையே, கொரோனா அச்சம் என்று தெரிவிக்கப்பட்டால், சமூக இடைவெளியைப் பின்பற்றி போராட்டத்தில் ஈடுபடலாம்.
இந்நிலையில், இவ்வாறான போராட்டங்களை செய்யவிடாது தடுப்பதென்பது ஒரு நாட்டில் இனத்துக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநீதி என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது” என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சரை வரவேற்கும் நிகழ்வில் ஆயிரம் பேருக்கு மேல் செல்லலாம் என்றால் அதற்கு நீதிமன்றத் தடையில்லை, இவ்வாறு பிள்ளைகளைத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும் தாய்மார் நீதி கேட்டுப் போராடினால் தடையா என இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்