முனைப்புடன் செயற்பட அழைப்பு!
தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் மக்கள் பிரதிநிதிகள் தேசியம் சார்ந்து முனைப்புடன் செயற்பட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளருது.
இன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் களத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, இலங்கையின் முதன்மைத் தேசியக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு ஆசனமும் இன்றி படுதோல்வி அடைந்துள்ளது.
மேலும், தமிழ் பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இம்முறை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் இருவரும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் விக்கினேஸ்வரன் அவர்களும் நாடாளுமன்றம் செல்கின்றனர். இந்த மாற்றம் தமிழ் மக்களுக்கு நன்மைகளை கொண்டுவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தற்போது நடைபெற்று முடிந்த தேர்தல் நமக்கு பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் கற்றுக்கொடுத்துள்ளன. எவ்வாறாயினும் நாடாளுமன்றம் செல்லும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறி;ப்பாக, தமிழ் பிரதிநிதிகள் இன்று தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இன்னும் கூடிய கவனம் செலுத்தி உரிய தீர்வுகளை விரைவில் பெற்றுத்தரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கூடிய நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
• நீண்ட, நெடுங்காலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தல்.
• தொடர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான தீர்வுக்கு வலியுறுத்தல்.
• மக்களுக்கு உரித்தான இன்னும் விடுவிக்கப்படாத படையினர் வசம் உள்ள காணிகளை உரியவர்களிடம் மீளப்பெற்றுக்கொடுத்தல்.
• புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீதான படையினரின் அச்றுத்தல்கள் யாவும் உடன் நிறுத்தப்படல். போராளிகள் இயல்பான வாழ்க்கையைத் தொடர்வதற்கான சமூகப்பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
• போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுய பொருளாதாரத்தை உறுதிப்படுத்தல் மற்றும் பெண்களின் சமூக பாதுகாப்பை மற்றும் சுயமரியாதையை உறுதிப்படுத்தல். பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புக்களுக்கான களங்களை, தெரிவுகளை விரிவாக்குதல்.
• வடக்கு – கிழக்கு வாழ் மக்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான சிறப்புத்திட்டங்களை வகுத்தலும் பொருத்தமான கொள்கைத் தீர்மானங்களை உருவாக்கவும் முனைந்து செயலாற்றுதல்.
மேற்குறிப்பிட்ட இந்த விடயங்கள் குறித்து நமது மக்கள் பிரதிநிதிகள் இவற்றுக்கு உரிய நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுட வேண்டும். இந்த பணிகள் நம்முன் அவசரமான, அவசியமான பணிகளாக உள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் வாக்கு கேட்கும் அரசியல் கள நிலைவரங்களில் இருந்து விடுபட்டு மக்களுக்கான, மக்கள் நலன்சார்ந்த தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு சாத்தியமான போராட்டங்களில் ஈடுபடவேண்டும். இவற்றை சாத்தியப்படுத்தும் வகையில் யாவரும் நேர்மையுடன் பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. எமது நம்பிக்கைகளுக்கு மாறாக செயற்படாமல் பாதிக்கப்பட்ட மக்கள் நலன்சார்ந்து இயங்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.