இலங்கையில் மிகப்பெரும் சூழ்ச்சி! தமிழ் மொழிக்கு வருவிரக்கும் ஆபத்து!
அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இரத்து செய்யப்பட்டு 20ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயமே தற்போது இலங்கை அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், 19ஆவது அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய முன்னெடுக்கப்படும் முயற்சியில் 13ஆவது திருத்தம் உள்ளிட்ட மேலும் சில அரசியல் அமைப்புக்களையும் திருத்தம் செய்வதன் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் மொழி அடிப்படையிலான பிரச்சினைகள் அதிகம் எழுந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் நிர்வாகம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதனைவிடுத்து தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்மொழி பயன்படுத்தப்படும் சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிங்கள பத்திரிகையொன்றில் காணப்பட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நேர்காணல் இனவாதத்தை தூண்டும் விதத்தில் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக வடக்கில் எவ்வாறு தமிழ் மொழியில் வழக்கு விசாரணை செய்ய முடியும்? வடக்கில் சிங்கள் மொழியிலேயே வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதோடு, 16ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போது முன்னெடுக்கப்படும் திருத்தமானது, 19ஆவது திருத்தத்தில் மட்டுமல்லாது மாறாக 13, 14, 16, 17 மற்றும் 19 ஆகிய அனைத்து திருத்தங்களிலும் திருத்தங்களை முன்னெடுக்கும் மிகப் பெரிய சூழ்ச்சியே அரங்கேற்றப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.