மீண்டும் அடாவடி:காவல்துறைக்கு எதிராக புகார்?
சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரியை தாக்கினார் என குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி மீது யாழ்ப்பாண பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (21) முச்சக்கர வண்டி சாரதியை பொலிசார் கைது செய்து தமது வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் போது சிவில் உடையில் வந்திருந்த பொலிஸ் அதிகாரியும் அந்த வாகனத்தில் ஏறி பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். அதன் போது தன்னுடன் முரண்பட்ட சாரதியை வாகனத்தினுள் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் பொலிஸார் சாரதியை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைத்திருந்த போதிலும் அங்கு வைத்தும் சிவில் உடை தரித்த பொலிஸ் அதிகாரி கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் காயமடைந்த சாரதியை பொலிசார் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி, தன்னை பொலிசார் சித்திரவதை புரிந்து தாக்குதல் மேற்கொண்டனர் என யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலக இணைப்பாளர் த.கனகராஜிடம் முறையிட்டுள்ளார்.