ஊடகப்பேச்சாளர்: டெலோவிற்கு இல்லை?
கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியை டெலோவிற்கு விட்டுக்கொடுக்க இரா.சம்பந்தன் தயாராக இல்லையென்பது தெரியவந்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் நாளை 20ம் திகதி நடைபெறவுள்ளது.
இதன் போது தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சத்திய பிரமாணம் மற்றும் கன்னியுரையாற்றவுள்ளனர்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுதொடர்பான தீர்மானத்தை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீர்மானம் நாளை 20ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரை மாற்றுவதென்ற முடிவில் இரா.சம்பந்தன் இல்லையென தெரிகின்றது.
தென்னிலங்கை அரசியல் போக்கில் பலமான ஊடகப்பேச்சாளர் தேவையென்ற வாதத்துடன் அவர் காய் நகர்த்த தயாராகியுள்ளார்.