10 ஆண்டுகளுக்கு எமது ஆட்சியே, நான் எதற்கும் தயார்…. ஜீவன் தொண்டமான்
யார் எதைச் சொன்னாலும் எதிர்வரும் பத்தாண்டுகளுக்கு புதிய அரசாங்கத்தினூடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பணியை முன்னெடுத்து செல்லும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைந்துள்ள சீ.எல்.எப்க்கு சென்ற ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொடியை ஏற்றிய பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கூறுகையில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை யார் விமர்சித்தாலும், எடுத்தெறிந்து பேசினாலும் மக்களின் சேவையை இன்னும் பத்து வருடங்களுக்கு இந்த புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதில் பின்வாங்கப் போவதில்லை.
தேர்தல் அறிவிக்கப்பட்ட காலங்களில் 40 நாட்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த மலையக மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதைப்போன்று இனிவரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக முன்னெடுக்க போகும் அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
இவர்கள் என்ன செய்யப்போகின்றார்களென ஒரு புறத்தில் விமர்சிப்பும், மறுபுத்தில் எதிர்பார்ப்பும் உள்ள நிலையில் சிறப்பான அபிவிருத்திகளை இங்கு முன்னெடுக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.