கொரோனா கர்ப்பவதிக்கு விசேட பிரிவு!
விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த கர்ப்பவதி ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் தனிமையான பிரசவ விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டு அதி தீவிர சுகாதார முன்னெச்சரிக்கையுடன் கூடிய பிரசவம் இடம்பெற்றது.
சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 7ம் திகதி நாடு திரும்பிய கணவனும் மனைவியும் விடத்தல்ப்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சமயம் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 13 பேருக்கு கொரோனா இதுவரை உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் எஞ்சியவர்களும் வீடு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக குறித்த கர்ப்பவதியும் அங்கேயே தங்கியிருந்த நிலையில் பிரசவ திகதியை எட்டியிருந்தார்.
இவ்வாறு பிரசவ காலம் என்பதால் சாதாரணமாக விடுதியில் அனுமதிக்க முடியாத சுழலில் ஓர் தனிமைப் படுத்தல் வசதி ஏற்படுத்தப்பட்டபோதும் பிரசவ அறை அனைத்து தாய்மாருக்கும் பயன்படுத்துவதனால் அந்த அறையை பயன்படுத்தாது மகப்பேற்று நிபுணர் சுரேஸ்குமாரின் வழிகாட்டலில் தனியான ஓர் இடம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட மகப்பேற்று அறையில் உச்ச பட்ச சுகாதார ஏற்பாடுகளுடன் திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த தாயாருக்கு நேற்றுக்காலை சுகப் பிரசவம் இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புக்கள் உறுதி செய்தனர்.