November 25, 2024

மாவீரர் தினத்திற்கு கோத்தாவிடம் கோரிக்கை!

யுத்தத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் முகமாக உயிரிழந்த மாவீரர்களின் உறவினர்கள் தமது உறவுகளை வருடத்தில் ஒரு தடவை நினைவுகூர அதற்கேற்ற இடங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் கிளிநொச்சி வேட்பாளர் வரதராஐசிங்கம் (விண்ணன்) ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் ஆதரவில்லாமல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ச தான் பதவியேற்ற நாளில் ஒரு அறிவிப்பை விடுத்திருந்தார் .அதாவது வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும்  நானே ஜனாதிபதி என்ற அவருடைய உள்ளத்தில் உதித்த அந்தக் கருத்தை நான் வரவேற்கின்றேன் .
அவருடைய கருத்து சகல இன மக்களையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவத்தை வெளிப்படுத்துகின்ற நிலையில் அவர் தமிழ் மக்களின் மனங்களை வெல்லுவார் என நான் நம்புகிறேன்.
எமது வடபகுதி மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நமது வளத்தை நாமே பயன்படுத்தக்கூடிய வகையில் வழிவகை செய்வதோடு தமிழ் மக்கள் இறுதிப்போரில் தமது உணவுக்காக தமிழீழ வைப்பகங்களில் வைக்கப்பட்ட தாலி உட்பட தங்க ஆபரணங்களை பெறுவதற்குரிய பரிகார வழிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
நாட்டின் சிறந்த நிர்வாகி என பெயர் பெற்ற ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச திகழ்ந்து வருகின்ற நிலையில் பிரச்சனையை அவரிடம் சாதுரியமாக அணுகுவதன் மூலம் நிச்சயமாக அதற்கான சிறந்த பரிகாரத்தை வழங்குவார். அவ்வாறு இல்லாமல் ஐநாவில் தீர்ப்போம் சர்வதேசத்திற்கு செல்வோம் என கூறி காலத்தையும் மக்களையும் ஏமாற்றுபவர்களை  மக்கள் இம்முறை தேர்தலில் நிராகரிக்க வேண்டும்.
ஆகவே தமிழ் மக்களுடைய பிரச்சனையை நேரில் ஆராய்வதற்கு ஐந்து பேர்கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை நியமிப்பதுடன்  அவர்களை வடபகுதிக்கு அனுப்பி தமிழ் மக்களின் எண்ணங்களையும்  எதிர்பார்ப்புக்களையும் ஜனாதிபதி கேட்டறிய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.