November 24, 2024

*சுமந்திரன் Vs. ராஜபக்சக்கள்: முடிவுறாத சமர்!*

ஜூன் மாதம் 2007, கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் வலுக்கட்டாயமாக தலை நகரிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த நகர்வின் சூத்திரதாரி அன்றைய பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச. சுமந்திரன் சம்பவ நாள் காலையிலேயே உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் வழக்கைத் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு செயலரது செயற்பாட்டிற்கு இடைக்காலத் தடை விதித்தது. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் அடுத்த நாள் காலையிலேயே கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார்கள். பாராளுமன்றத்தில் அன்றைய பிரதமர் பொது மன்னிப்புக் கோரினார்.

*

இனமொன்றோடோ, மதமொன்றோடோ தம்மைப் பிரத்தியேகமாக அடையாளப்படுத்தும் அரசியற் கட்சிகளைத் தடை செய்யும் சட்டத்தை ராஜபக்சக்கள் 2009 இல் இயற்றிய போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை வாதாடி வென்றார். இன்று சிறுபான்மை சமூகங்களுக்கான பிரத்தியேக அரசியல் பிரதிநிதித்துவம் நிலைத்திருக்க தமிழரசுக் கட்சியும், சுமந்திரனும் முக்கியமானவர்கள்.

*

புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்ட மூலமொன்றை 2010 இல் ராஜபக்ச அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயன்றது. அப்போது போர் முடிந்திருந்த போதும் வட மாகாண சபை மீள இயங்குவிக்கப்பட்டிருக்கவில்லை. மாகாண சபைக்குப் பகிரப்பட்ட அதிகாரங்கள் தொடர்பான புதிய சட்ட மூலமொன்று அனைத்து மாகாண சபைகளது கருத்துக்களையும் கேட்ட பின்னரே நிறைவேற்றப்படாலாம். சுமந்திரன் இந்தச் சட்டமூலம் குறித்த வட மாகாண சபையின் கருத்துக்களை அரசாங்கம் கேட்டுப் பெற்றுக்கொள்ளாததால் இதை நிறைவேற்ற முடியாது என உச்ச நீதிமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வாதாடினார். நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டது.

*

புத்த சாசன அமைச்சுக்கு புனிதப் பிரதேசமென்ற போர்வையில் தனியார் காணிகளைக் கூடக் கையகப்படுத்திக் கொள்ளும் அதிகாரத்தைக் கொடுக்கும் சட்டத் திருத்தமொன்றை செய்ய ராஜபக்‌ஷ அரசாங்கம் 2011 இல் முயன்றது. சுமந்திரன் இந்த சட்டத்திருத்தத்தை உச்ச நீதிமன்றில் எதிர்த்து வென்றார். தீர்ப்பை வழங்கிய பிரதான நீதியரசர் சிராணி பண்டார நாயக்காவை ராஜபக்சக்கள் குறி வைக்கத் தொடங்கினார்கள்.

*

2011 இல் ராஜபக்சக்கள் இந்தியாவின் அழுத்தத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இனப் பிரச்சினைக்கான தீர்வைக் குறித்துப் பேசத் தலைப்பட்டார்கள். சம்பந்தன் ஐயாவிற்கு அடுத்த படியாக இந்தப் பேச்சுக்களில் கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கி வழி நடத்தியவர் சுமந்திரன். ராஜபக்சக்கள் இந்த முயற்சிகளில் ஈடுபாட்டைக் காட்டவில்லை என்பது புலப்பட்ட போதும், சுமந்திரன் மிகுந்த அர்ப்பணிப்புடன் 18 சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டார். மகிந்த ராஜபக்ச தானாகவே ஒரு கட்டத்தில் பேச்சுக்களை நிறுத்தினார். சர்வதேசத்திற்கு ராஜபக்சக்கள் தமிழர் பிரச்சினை தொடர்பிலோ, நீதி தொடர்பிலோ அக்கறை காட்டவில்லை என்பதை அமைதியாகச் செயற்பட்டுப் புலப்பட வைத்தார். யுத்த காலத்தில் தமிழர் நாம் இழந்திருந்த சர்வதேச சமூகத்தின் அனுசரனை மீண்டும் எம் பக்கம் சாய்ந்தது.

*

மாகாண சபையின் கீழான மாகாண அபிவிருத்தி, உட்கட்டமைப்பு விருத்தி, பொருளாதாரத் திட்டமிடல் முதலிய பல்வேறு விடயங்களை மத்திய அரசின் கீழ் – குறிப்பாக பசில் ராஜபக்சவின் பொருளாதர அபிவிருத்தி அமைச்சின் கீழ் – சுருக்கும் திவிநெகும சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சுமந்திரன் செயற்பட்டார். உச்ச நீதிமன்றம் திவிநெகும திட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்ற மிக முக்கியமான வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

*

தீர்ப்பிட்ட பிரதான நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை ராஜபக்சக்கள் வலிந்து பதவி நீக்கினார்கள். சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நீதித் துறையின் சுயாதீனம் கேள்விக்குள்ளாகியிருப்பது புலப்பட்டது. நீதியரசர் நீக்கம் தொடர்பில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் சுமந்திரன் ஆற்றிய அறச் சீற்றம் நிறைந்த உரை இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஜனநாயகத்தை நேசிக்கும் இலங்கையர் அனைவருக்கும் ராஜபக்சக்களை எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியது. சமூக மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. (https://www.youtube.com/watch…)

*

போர் முடிந்த போது தமிழ்த் தரப்பின் இராஜதந்திர வலிமை நலிவடைந்திருந்தது. 2010 இல் பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக இணைந்து கொண்ட சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரப் பணிகளுக்கு பொறுப்பாக சம்பந்தனால் நியமிக்கப்பட்டார். மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு
விடயங்களில் கற்றறிந்த சட்டத்தரணியான சுமந்திரனால் இராஜதந்திர வட்டங்களில் சம-அந்தஸ்துள்ளவராக உறவுகளைப் பேண முடிந்தது. தனது மொழித் தேர்ச்சியாலும், நுணுக்கமான வாதங்களாலும் சுமந்திரனால் தமிழரது போராட்டத்தின் நியாத்தைக் குறித்து இராஜதந்திரிகளது பார்வையை மாற்ற முடிந்தது.

மேலும் உள்நாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை ஜனநாயகத்துக்கான, வலிமையான எதிர்க்கட்சியாக பாரளுமன்றத்தில் நிலைப்படுத்தியிருந்தது. அனைத்து சிறுபான்மை இனங்களுக்கான உரிமைக்குரலாக ஒலிக்கத் தொடங்கியிருந்தது. ஜனநாயகம் மற்றும் ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்க்கும் முக்கிய வழக்குகளை வாதடி வெற்றி கண்டது.

ராஜபக்சக்கள் மோசமான ஏதேச்சதிகார ஆட்சியை நிறுவுவதை சுமந்திரன் சர்வதேச மட்டத்தில் தெளிவுபடுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதன் பயனாக 2012 இல் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேறியது. இதே ஐ.நா. மனித உரிமைகள் சபை 2009 இல் இலங்கையை பயங்கரவாதத்தை முறியடித்ததைப் பாராட்டித் தீர்மானம் வெளியிட்டிருந்தது. இலங்கையின் எதிர்க்கட்சி ஒன்று உத்தியோக பூர்வமாக அமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டமை இதுவே முதற் தடவையாகும். 2012 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் படிப்படியாக 2014 இல் சர்வதேச விசாரணை ஒன்றை உள்ளடக்கிய தீர்மானமாக விருத்தியடைந்தது.
சர்வதேச மட்டத்தில் ராஜபக்சக்களது செல்வாக்கை நலிவடையச் செய்ததில் கூட்டமைப்பிற்கும், கூட்டமைப்பின் இராஜதந்திரியான சுமந்திரனுக்கும் பாரிய பங்களிப்பிருந்தது.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகள் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை (OHCHR Investigation on Sri Lanka) வெளியிட்ட அறிக்கை தான் இன்று ராஜபக்சக்களின் தலைமையில் இலங்கையின் இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உறுதியான உத்தியோக பூர்வ சர்வதேச ஆவணம். இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையை சுமந்திரன் தன் காத்திரமான பங்களிப்புடன் – மூன்று அடுத்தடுத்த ஜெனீவாத் தீர்மானங்களூடாக – உருவாக்கினார். இந்த அறிக்கை சொல்லி நிற்கும் மனித உரிமை மீறல்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுமிடத்து அவை சர்வதேசக் குற்றங்களாகக் கொள்ளப்படலாம்.

*

ராஜபக்சகளை 2015 தேர்தலில் தோற்கடிப்பதிலும் சுமந்திரனது வகிபாகம் முக்கியமானது. தன்னை ஜனநாயகத்துக்கான குரலாக தெற்கில் நிலைப்பித்திருந்த சுமந்திரனால் சோபித்த தேரரோடு இணைந்து இலங்கையின் அனைத்து இன மக்கள் மத்தியில் ஏதேச்சதிகாரத்துக்கும், ஊழலுக்குமெதிராகத் தொழிற்படக் கூடியதாக இருந்தது. சோபித்த தேரர் தன் முயற்சிகளை 2013-களிலேயே ஆரம்பித்திருந்தார். தமிழ் பேசும் சிறுபான்மைத் தரப்பில் அவர் நெருங்கி இயங்கியது சம்பந்தன் ஐயா மற்றும் சுமந்திரன் என்பவர்களோடு தான். சுமந்திரனை இலகுவில் தமிழ் இனச் சாயத்தையும், பயங்கரவாதச் சாயத்தையும் பூசி நிராகரிப்பது ராஜபக்சக்களுக்கு முடியாதிருந்தது.

தம்மைத் தீவிரத் தமிழ்த் தேசியப் பற்றாளர்களாகக் காட்டிக் கொண்டு ராஜபக்சக்களின் ஒட்டுண்ணிகளாகச் செயற்படும் தமிழ்க் கட்சிகள் 2015 ஜனவரி தேர்தலைப் புறக்கணிக்கக் கோரின. ஆனால் கூட்டமைப்புத் தலைமை தெளிவான நிலைப்பாட்டை எடுத்து இயங்கியது. மக்கள் மனமறிந்து செயற்பட்டது. 2/3 பெரும்பான்மையோடும், போரை வென்ற மதமையோடும் ஆட்சி நடத்திய ராஜபக்ச அரசாங்கம் தேர்தலில் கவிழ்க்கப்பட்டது.

*

புதிய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட 19 ஆம் திருத்தச் சட்டத்தை வரைந்தவர்களில் சுமந்திரன் முதன்மையானவர். இத் திருத்தச் சட்டம் ஒரு தனிநபர் அதியுச்சமாக இரு ஆட்சிக் காலங்களே ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற நிலையை மீள உருவாக்கியது. ஜனாதிபதியிடம் குவிந்திருந்த அதிகாரங்களைக் குறைத்தது. சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கியது. தகவல் அறியும் உரித்தை மக்களிடம் கொடுத்தது.

ராஜபக்சக்கள் மீண்டும் தற்போது அதிகாரத்திலிருந்தாலும், அவர்களது ஏதேச்சதிகாரச் செயற்பாடுகளுக்கு 19 ஆம் திருத்தச் சட்டம் மிக முக்கியமான தடையாக தற்போது விளங்குகிறது. இதனாற் தான் அவர்கள் 19 ஆம் திருத்தத்தை நீக்குவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

*

தோல்வியடைந்த ராஜபக்சக்கள் பின் வாசலால் மீண்டும் அரச அதிகாரத்திற்கு வரத் தலைப்பட்டார்கள். 2018 ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு முரணாக மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்தார்.

தேர்தலில், அரசியலமைப்பிற்கு அமைவாகத் தெரியப்பட்ட அரசாங்கம் நிலைக்க வேண்டுமாயிருந்தால் இரு முனைகளில் சமர் செய்ய வேண்டிய தேவை இருந்தது. (i) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காக்க வேண்டும்: உறுப்பினர்கள் கட்சித் தாவலைத் தடுக்க வேண்டும்; (ii) அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கையை சட்ட ரீதியில் நீதிமன்றில் எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

இரு முனைகளிலும் சுமந்திரன் கூரிய அஸ்திரமாக மிளிர்ந்தார். கூட்டமைப்பிலிருந்து ஒருவர் கட்சி தாவிய போதும் மீதி அனைவரும் ஒரணியாக நின்றார்கள். இந்த அரசியற் போராட்டத்தில் சுமந்திரனின் தேசிய தலைமைத்துவம் வெளிப்பட்டது. சிங்கள ஊடகங்களில் ராஜபக்சக்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை சுமந்திரன் தெளிவுபடுத்தினார். ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். பாரளுமன்றம் கூட வேண்டுமெனவும், பாராளுமன்றம் கூடுவதை ஜனாதிபதியால் தடுக்க முடியாதென்ற உண்மையையும் பொது வெளியில் ஆணித்தரமாக எடுத்துக் கூறினார். கூட்டு அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களில் ஒருவர் பின்பொரு நாள் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்ப்பதில் சுமந்திரன் வழங்கிய தலைமைத்துவத்தை மெச்சி அவரை ‘நியமனம் பெறா எதிர்க்கட்சித் தலைவர்’ எனப் பாராடினார்.

பாராளுமன்றக் கலைப்பிற்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கில் முன்னணி சட்டத்தரணிகளில் ஒருவராக வாதாடி வழக்கை வென்று, மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டினார்.

*

ராஜபக்சக்கள் இந்தப் பாராளுமன்றத்தில் எவரெல்லாம் இடம்பெறக் கூடாதென்று விரும்புவார்களோ, அந்தப் பட்டியலில் சுமந்திரன் முதல் நபராக இருப்பார். அவர்களது ஏதேச்சதிகார, இராணுவ ஆட்சிப் பயணத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர் முள்ளாக விளங்குபவர் சுமந்திரன். அவர்களை நீதிமன்றிலும், பாராளுமன்றத்திலும் எதிர்த்துக் காத்திரமான வெற்றிகளை ஈட்டியவர்.

எவரில்லாவிடினும், எமக்காகப் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியவர் சுமந்திரன்!