புலிகளின் ரெயினிங் மாஸ்டர் அடேல் இங்கு வசதியாக வாழ்கிறார்! எந்த நாடு தெரியுமா?
விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டனில் நீக்கும் சட்ட நடவடிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசு ஆரம்பித்துள்ளது. ஆனால், விடுதலைப் புலிகள் சிறார்களை படைக்கிணைத்த விவகாரத்தில் எந்த கவலையையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் பிரித்தானிய நாடாளுமன்ற குழுவின் இலங்கை விவகாரங்களிற்கு பொறுப்பானவரான லோர்ட் நசிபி.
உலகளாவிய மனித உரிமைகள் குறித்த கலந்துரையாடலொன்றில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய போது, இதனை தெரிவித்தார்.
புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை இங்கிலாந்து நீதிமன்றங்களில் நாடு கடந்த தமிழீழ அரசு ஆரம்பித்துள்ளது என்றார்.
“2001 ல் நாங்கள் தடைசெய்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். இது தமக்காக பணியாற்ற விடுதலைப் புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தங்களையே நாடு கடந்த தமிழீழ அரசு ஆதரிக்கிறது. அவர்கள் ஒருபோதும் புலிகளின் பயங்கரவாதத்தையோ, வன்முறையையோ கண்டிக்கவில்லை. அவர்கள் உலகெங்கும் புலிகளின் பிரச்சாரத்தை பரப்புகிறார்கள். புலிகளின் நினைவு நிகழ்வுகள், கொடி, கரும்புலிகள் பற்றி உலகத்திலுள்ள தமிழ் இளைஞர்களிடம் பரப்புகிறார்கள்.
எல்லாவற்றையும் விட மோசமானது, இவர்கள் சிறுவர் வீரர்கள் தொடர்பாக எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவர்களின் வாழ்க்கைக்கும் உதவவில்லை. 2005 ஜூலை 31 யுனிசெப் அறிக்கையில் 5,081 சிறார்கள் படைக்கு இணைக்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 40% பெண்கள் மற்றும் 60% சிறுவர்கள் அடங்குகின்றனர். போரின் முடிவில், 594 பேர் எஞ்சியிருந்தனர்.
சிறுவர் படையினரின் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சியாளராக இருந்த திருமதி பாலசிங்கம், ஐக்கிய இராச்சியத்தில் வசதியாக வசிக்கிறார். அது நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்” என்றார்.