November 25, 2024

மீண்டும் யாழை எட்டிப்பார்க்கும் கோரோனா?

யாழில் அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர் பொதுமக்கள் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கபட்ட விவகாரம் சூடுபிடித்துள்ளது.

ஆயினும் அங்கும் அவர் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டதாக பணிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 07ஆம் திகதி குறித்த நபர் சவுதி அரேபியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட 208 பயணிகளுடன் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு ஏற்பட்ட சுவாசப் பிரச்சினை நோய் சிகிச்சைக்காக விசேட அனுமதியில் யாழ். போதனா வைத்தியசாலையின் கட்டுப்பாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட விடுதியிலும் தனிமைப்படுத்தல் அறையில் வைத்தே சுவாச நோய் சிகிச்சை வழங்கப்பட்டது. சுவாச நோய் சிகிச்சை முடிவடைந்த நிலையில் அவர் விடத்தல்பளை முகாமிற்கு மாற்றப்பட்ட மறுநாள் அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தியபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழாம் அனைவரும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு அங்கிகள் அணிந்துள்ளனர். இருந்தும் முன்னெச்சரிக்கையாக 6 பேர் அவர்களின் வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் சவுதியில், இலங்கை விமான நிலையத்தில், தனிமைப்படுத்தல் நிலையத்தில் (2முறை) மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையில் (2முறை) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு பெறப்பட்டதாக  ஊடக சந்திப்பில் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்.ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முதல் 4 பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படாத தொற்று மீள் பரிசாதனையில் உறுதிப்படுத்தப்பட்டது எவ்வாறு என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு,அந்த இடைப்பட்ட இடைவெளியில் இவர் முகாமில் நெருங்கிப் பழகியவர்கள் சிலர் தொற்றாளர்காக இனங்காணப்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் மூலம் இவருக்கு தொற்றியிருக்க வாய்ப்புள்ளது என பதில் அளிக்கப்பட்டது.