தபால் மூல வாக்களிப்பில் மந்தம்?
இன்றும் நாளையும் தபால்மூல வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (24) காலை 8.30 முதல் பிற்பகல் நான்கு மணிவரையும், நாளை (25) காலை எட்டு 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் தபால்மூல வாக்களிக்க முடியும்.
இதனிடையே இதுவரை தபால்மூல வாக்களிக்க தவறிய அரச பணியாளர்கள் தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி காரியாலயத்தில் வாக்களிக்க முடியும்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவி தேரதல் ஆணையாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தபால்மூல வாக்களிப்பின் சதவீதத்தை மீளாய்வு செய்து, தேவை ஏற்படுமாயின், மேலதிக தினம் ஒன்றை வாக்களிப்பதற்காக வழங்குவது தமது எதிர்பார்ப்பாகும் என்று ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை தேர்தல் கடமைகளில் இணைந்து கொள்வது கட்டாயமானதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான வாக்களிப்பு தபால்மூல வாக்களிப்பை போன்று இடம்பெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவர்களுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளது. வாக்காளர்களின் இரகசிய வாக்களிப்பிற்கான உரிமை எந்த வகையிலும் நீக்கப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.