November 22, 2024

முன்னாள் போராளி விவகாரம்: ஆணைக்குழு தலையீடு!

கிளிநொச்சி திருநகர் முன்னாள் பெண் போராளி வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டு அவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியோடு, வீடு உடைப்பதற்கு வந்தவர்கள் தாம்  கிளிநொச்சி காவல்துறை ஒத்துழைப்புடனே உடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதி இன்றி எந்த தனிநபரும் எவரினது வீடுகள் மற்றும் கட்டங்களை உடைக்க முடியாது என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அத்துமீறி  பெண் வசித்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் எறியப்பட்டு அவரும் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்க்கப்பட்ட பெண் கடந்த திங்கள் கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் முறையிட்டதற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் ஆலுவலகம் கிளிநொச்சி காவல்; நிலையத்திற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்