பிரச்சாரத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது: கைதான இடத்திலிருந்தே சிவாஜி மீண்டும் பிரச்சாரம்!
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரச்சார பணியில் ஈடுபட்ட 14 பேர் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (18) மாலை இந்த சம்பவம் நடந்தது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரச்சார நடவடிக்கைகள் கரடிப்போக்கு சந்தியில் இருந்து A9 வீதியூடாக கிளிநொச்சி சந்தை வரையிலான பகுதியில் இடம்பெற்றது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்களான விக்னேஸ்வரன், ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் அவர்களது படங்கள் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அங்கத்துவ கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் வினியோகம் செய்யப்பட்ட போது, கிளிாச்சி குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர்களது அலுவலகத்திற்க்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்து சிறிது நேரத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
வீதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க முடியாது என குற்றத் தடுப்புப் பிரிவினரால் எச்சரிக்கை விடுத்து அவர்களை விடுதலை செய்தார்கள். விடுதலை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட அதே இடத்தில் இருந்து எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் தொடர்ந்தும் துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
இவர்களது கைதின் பின்னணியில் அரச சார்பான பிரபல அரசியல் வாதியின் தலைமையிலான சுயேட்சை குழுவின் தூண்டுதலே இருந்ததாக சிவாஜிலிங்கம் ஊடகங்களிடம் குற்றம்சாட்டினார்.
இது சம்பந்தமாக தேர்தல் ஆணைக் குழுவிற்க்கும், தேர்தல் கண்காணிப்பு குழுவினர்களுக்கும் முறைப்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.