இலங்கையில் “தமிழீழம்” என்பதை தமிழ் மாநிலமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்
தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலையை முன்கொண்டு செல்கின்ற ஒரு கட்சியாக இருக்கின்றது. ஜனநாயகப் போராளிகளின் ஆதரவு, அனுசரணை என்பது தொடர்ந்து அந்த விடுதலைப் பயணத்தை ஜனநாயக வழியிலே மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருப்பது மகிழ்வளிக்கிறது.
எழுபதுகளில் தென்னிலங்கையில் இளைஞர் குழு ஆயுதமேந்திப் போராடியது. அது ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டது. பின்னர் எண்பதுகளில் அது மீளுயிர்ப்புக் கொண்டது. அதனையும் இலங்கை அரசாங்கம் தன் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது.
அடக்கப்பட்ட ஒரு இனம் தன்னுடைய விடுதலைப் பாதையினை வெவ்வேறு விதமாக அமைத்துக் கொண்டாலும் இலட்சியம் ஒன்றாகத்தான் இருக்கின்றது.
தமிழீழம் தொடர்பாக வாசுதேவ நாணயக்கார ஒருமுறை குறிப்பிடுகின்போது ‘வடக்கு கிழக்கு மாநிலம் தமிழர்களின் தாயகம் என்ற வகையிலே அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு தமிழீழம் என்று பெயர் சூட்டுவதிலே எவ்விவித முரண்பாடும், தடையும் கிடையது’ என்று சொல்லியிருந்தார்.
அவர் அந்த விடயத்தைத் தற்போது மறுக்க முடியும். ஆனால் தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்ற வகையிலே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அத்தகைய, தமிழீழத்தை நோக்கியே எமது செயற்பாடு நடைபெறுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.