இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் இந்தியா…..
இந்திய அரசின் அழுத்தங்கள் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் கொள்கலன்களை கையாளும் பணிகளை ஆரம்பிக்க முடியாமல் இருப்பதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக பணிகளை ஆரம்ப முடியாமல் இருப்பதாகவும் இது சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை எடுக்க தனக்கு கால அவகாசத்தை வழங்குமாறும் தயா ரத்நாயக்க தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் எதிர்காலத்தில் தாம் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியார் துறைக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாகவும் அது சம்பந்தமான இரகசிய உடன்படிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் சந்திரசிறி கமகே தெரிவித்துள்ளார்.