November 22, 2024

வடக்கு அப்பாவி தமிழர்களிற்காக இராணுவம் வீதியில் இறங்கி வேலை செய்கிறது: இராணுவத்தளபதி!

விடுதலைப்புலிகளால் அழிவடைந்த வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீள கட்டி எழுப்பி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்றையதினம் புங்குடுதீவில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டு திட்டத்தினை திறந்து வைத்த பின் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்பொழுது இலங்கையில் கொரோனா நோய் முற்றாக நீங்கி விடவில்லை.

நான் வடக்கு மக்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக நீங்கள் முகக்கவசம் அணிந்து கட்டாயம் வீதிகளில் பயணிக்க வேண்டும். அதேபோல் நீங்கள் கைகளை நன்றாக கழுவி உங்களுடைய சுகாதார நடைமுறைகளை பேணுவது அவசியமாகும். ஏனெனில் இலங்கையில் இருந்து இன்னும் கொரோனா முற்றாக நீங்கவில்லை என்றார்.

யுத்தம் முடிந்த பின்னர் வடக்கில் ராணுவத்தினரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் போன்ற வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல் ராணுவம் மட்டுமல்ல முப்படையினரும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். வடக்கில் உள்ள அப்பாவி தமிழ் மக்களுக்காக ராணுவத்தினர் தற்போது வீதிகளில் இறங்கி வேலைகள் செய்வதை நீங்கள் பார்க்க கூடியதாக இருக்கும்.

அதே போல் தான் ஒரு பெரிய சவாலாக அமைந்தது இந்த கொரோனா வைரஸ். அதைக் கூட நாம் முற்றுமுழுதாக இல்லாதொழிக்காவிட்டாலும் பூரண கட்டுப்பாட்டுக்குள் முப்படையினர் இணைந்து வைத்திருக்கின்றோம் என்றார்.