November 22, 2024

ஆமி மயம்: ரட்ணஜீவன் ஹூல் கவலை!

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார்.

புலனாய்வு அதிகாரிகள் சில வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் எங்கு செல்கிறார்கள், எங்கு கூட்டங்கள் திட்டமிடப்படுகின்றன என்பது குறித்து தகவல்களைத் திரட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராஜா முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார்.
இராணுவம் வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் வாகனங்கள் பரிசோதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜூலை 5ஆம் திகதி எங்களின் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் அதிகாரி இரண்டு தடவை தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டார் என ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதனின் வாகனம் முல்லைத்தீவில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது வாகனத்தில் அடையாள அட்டை அளவைக்கொண்ட வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட காட் காணப்பட்டுள்ளது .அவை முறையானவை என குறிப்பிட்டுள்ள ஹூல் சுவரொட்டிகள் மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளன ஆனால் இராணுவம் வாகனத்தை நிறுத்தி அட்டைகளை பறிமுதல் செய்தது என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 17 ஆம் திகதி அன்று ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் அளித்த இரண்டு முக்கிய வாக்குறுதிகளில் தேர்தலின் போது இராணுவம் நிறுத்தப்பட மாட்டாது, காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்தப்படுவர் என தெரிவித்திருந்ததாக ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.