முன்னணியை முடக்க சதி:சுகாஸ்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்க படைத்தரப்பு முற்பட்டுள்ளது.தமக்கு தேவையானவர்களை வெல்ல வைக்கவும் அதே வேளை எம்மை முடக்கவும் சதிகள் பின்னப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஸ்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் நேற்றைய தினம் முன்னணியின் தலைமையகம் மற்றும் வட்டுக்கோட்டை அலுவலகம் ,நல்லூர் அலுவலகம் என படையினராலும் இலங்கை காவல்துறையாலும் முற்றுகைக்குள்ளானது.
இம்முற்றுகையினை கரும்புலிகள் தினத்திற்கான முற்றுகையாக நாங்கள் கருதவில்லை.
ஒருபுறம் சுதந்திரக்கட்சியின் வேட்பாளரான அங்கயன் இராமநாதனை வெற்றி பெறவைக்க படைத்தரப்பு மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.
இன்னொருபுறம் முன்னணியின் பிரச்சாரங்களை முடக்குவதன் மூலம் எத்தகைய நோக்கத்துடன் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றதென்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுள் பிளவுகள் என்பது தேர்தல் கால புனைகதைகளென தெரிவித்த அவர் நான்கு சட்டத்தரணி வேட்பாளர்களும் எதோவொரு வகையில் சிறுவயது முதலே வகுப்பு தோழர்களென தெரிவித்த சுகாஸ் கடந்த தேர்தல் காலப்பகுதியிலும் இதே போன்று புரளி அவிழ்த்து விடப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.