November 22, 2024

நியூசிலாந்தில் நினைவுகூரப்பட்ட கரும்புலி நாள்

சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமான அதிசயபிறவிகள் இந்த கரும்புலிகள். மாவீரன் மில்லரோரோடு ஆரம்பமாகியது கரும்புலிகள் வரலாறு. அவர் காவியமான 1987 ஜூலை மாதம் 5ம் நாளோடு ஆரம்பமாகியது இந்த கரும்புலிகள் நாள். இப்புனித நாளில் இந்நெருப்பு மனிதர்களுக்கு வீரவணக்கம் செலுத்திட நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த ஞாயிற்றுக்கிழமை (05/07/2020) அன்று Three Kings Fickling Center மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு ஒருங்கமைப்பு செய்யப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
ஈகைச்சுடரினை மாவீரர் இளந்தீரனின் சகோதரன் கௌரீசன் அவர்கள் ஏற்றிவைக்க, தொடர்ந்து மக்கள் அனைவரும் கரும்புலிகளின் நினைவுத்தூபிக்கு தீபஞ்சலி மற்றும் மலரஞ்சலி செலுத்தினர். இவர்களின் அளப்பெரும் தியாகத்தை உணர்ந்து இந்த அஞ்சலியானது உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
கரும்புலி நாளின் முதல் நிகழ்வாக நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை மற்றும் பண்பாடு பொறுப்பாளர் திரு ஜெகன் அவர்கள் கரும்புலி வீரர்களின் பங்கு எமது விடுதலை போராட்ட வரலாற்றில் எவ்வளவு முக்கியமானது என்பதை பற்றி எடுத்துரைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது போராட்ட வரலாற்றின் பாதுகாப்பு அரணாக விளங்கிய எமது தற்கொடைப் போராளிகளை நெஞ்சில் நிறுத்தி எமது இலட்சிய பாதையில் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
அதனை தொடர்ந்து நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொருளாளர் வேந்தன் அவர்கள், கரும்புலிகள் பற்றியும் அவர்களின் தியாகம், மனோதிடம், வீரம் பற்றியும் மிகவும் உணர்வு பூர்வமாக உரையாற்றினார். தான் படித்த பாடசாலையில் மில்லர் அண்ணா படித்த பெருமைகளை பற்றியும் அவரின் நினைவு நாட்கள் தமது பாடசாலையில் எவ்வாறு அனுஷ்ட்டிக்கப்பட்ட்து என்பது பற்றியும் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து இளையோர் அமைப்பின் செயலாளர் திரு லக்சன் அவர்களினால் கரும்புலிகளின் வலிகளையும் தியாகத்தையும் உணர்த்தும் விதமான „உரிமையின் இழப்பின் வலியதை நாளும் உணர்வில் சுமந்து வாழ்ந்தவர்கள்…….“ என்று தொடங்கும் கவிதையை வழங்கினார்.
இறுதி நிகழ்வாக திரு சஜந்தன் அவர்களினால்  தமிழீழ மக்களின் துயரம் சொல்லும் வகையில் கவிஞர் காசிஆனந்தன் அவர்கள்  எழுதிய ,
„மாங்கிளியும் மரங்கொத்தியும்
கூடு திரும்பத் தடையில்லை
நாங்கள் மட்டும் உலகத்திலே
நாடு திரும்ப முடியவில்லை…” எனும் மனதை உருக்கும் பாடலினை பாடினார்.
இத்துடன் இந்த உணர்வுபூர்வமான நிகழ்வுகள் யாவும் கரும்புலிகளின் மறவா நினைவுகளுடன் நிறைவுக்குவந்தது.
இந் நிகழ்வுக்கு பின்னரும் கரும்புலிகள் பற்றிய காணொளிகள் காண்பிக்கப்பட்டது. நிகழ்வுகள் முடிந்த பின்னரும் மக்கள் அக்காணொளிகள் கண்டு கரும்புலிகளின் தியாகத்தையும் வீரத்தையும் எண்ணி வியப்புற்றதை காணக் கூடியதாக இருந்தது.