சுமா,சிறீ கொடும்பாவி: பின்னணியில் சந்தேகம்!
வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது கொம்பாவி எரியூட்டப்பட்ட விவகாரத்தின் பின்னே முன்னாள் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் சிலர் இருப்பது அம்பலமாகியுள்ளது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட குறித்த போராளியொருவரின் ஏற்பாட்டில் சுதந்திரக்கட்சி அங்கயன் அணியே கொடும்பாவி எரிப்பை சுமந்திரனின் சொந்த இடத்தில் வைத்து அரங்கேற்றியுள்ளது.
ஒருபுறம் ஜனநாயகப்போராளிகள் கட்சி கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்க மறுபுறம் கொடும்பாவி எரியூட்டப்பட்டுள்ளது.
இதனிடையே எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த வேண்டாமென, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா, தமிழ் அரசியல்வாதிகளிடம் வேண்கோள் விடுத்துள்ளார்.
‚எத்தனையோ பலதரப்பட்ட ஆயுதக் குழுக்கள், தமிழ் மக்கள் மத்தியிலே தோன்றினாலும், அவை ஆயுதம் ஏந்தியதன் இலக்கை நோக்கிப் பயணிக்கத் தவறின அல்லது மாறி மாறி பதவிக்கு வந்த அரசாங்கங்களால் திசைதிருப்பப்பட்டன.
‚ஆனால், விடுதலைப் புலிகளாகிய நாம் இறுதிவரை போராடினோம். அரசாங்கம், சர்வதேச நாடுகள் பலவற்றுடன் சேர்ந்த மேற்கொண்ட சதியால் எமது ஆயுதங்கள் மௌனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
‚இலங்கையில் தமிழ் இனமென ஓர் இனம் உண்டு எனவும் அவ்வினத்துக்குப் பிரச்சினைகள் உள்ளனவென்னும் சர்வதேச மட்டத்தில் விவகாரமாக உருவெடுப்பதற்குக் காரணம் எமது மாபெரும் பொராட்டமும் உயிர்த் தியாகமுமேயாகும்.
‚அவ்வாறிருக்க, எமது உரிமையைக் கொண்டாடுவதற்கு எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளுக்கும் உரிமை கிடையாது. அவர்கள் வேண்டுமானால் அப்பாவி மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி, மக்கள் போடும் வாக்குப் பிச்சையில் வாழ்க்கையைக் கொண்டு செல்லட்டும்.
‚ஆனால், எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் நமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த வேண்டாம். கடந்த காலங்களில் தங்கள் பதவிகளால் ஏதேனும் சேவைகள் ஆற்றப்பட்டிருந்தால், அதனைச் சொல்லி வாக்குக் கேளுங்கள்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.