November 22, 2024

பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு 2036 வரை புதினின் ஆட்சிக் காலம் நீடிப்பு!

ரஷ்ய நாட்டு சட்டப்படி அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.   ஒருவர் தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபராக நீடிக்க முடியாது.  தற்போதைய அதிபர் புதின் முதலில் 2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்தார்.  அதன் பிறகு அந்நாட்டின் பிரதமராக 2008 முதல் 2012 வரை பதவி வகித்தார்.  மீண்டும் 2012 ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யாவின் அதிபராக புதின் உள்ளார்.புதினின் பதவிக்காலம் வரும் 2024 ஆம் ஆண்டுடன் முடிவடைய உள்ளது.  அவரது பதவிக் காலத்தை மேலும் இருமுறை அதாவது வரும் 2036 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கத் தீர்மானம் இயற்றப்பட்டது. அதையொட்டி அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.   ஆனால் இது குறித்த வாக்காளர்கள் ஆதரவு மிகவும் அவசியம் எனக் கூறிய புதின் அதற்கான ஏற்பாட்டை நடத்தினார்.

கடந்த 25 ஆம் தேதி அதிபர் புதின் பதவிக்கால நீட்டிப்பு சட்டம் குறித்து வாக்காளர்களின் கருத்துக்கான தேர்தல் நடந்தது.   இந்த வாக்கெடுப்பு 7 நாட்கள் நடந்தது.   இந்த வாக்கெடுப்பு வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்றது.  இதில் புதின் கலந்துக் கொண்டு வாக்களித்தார்.  தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதுவரை மூன்றில் இரு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.  இதில் புதினுக்கு ஆதரவாக 76.9% பேர் வாக்களித்துள்ளனர்.  இதனால் புதின் பதவிக்காலம் வரும் 2036 வரை நீட்டிக்கப்பட்டதற்கு  வாக்காளர்கள் ஆதரவு அளித்துள்ளது உறுதியாகி உள்ளது.