சாத்தன்குள படுகொலை; 5 காவல்துறையினரையும் கைதுசெய்து சிறையிலடைப்பு!
தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது மதுரை நீதிமன்றம். அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் தங்கள் விசாரணையை தொடங்கினர். சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பிக்கள் அணில்குமார், முரளிதரன் ஆகியோர் சாத்தான்குளத்தில் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இந்த வழக்கில் கொலை வழக்குப் பதிவு செய்து எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்ட்டார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் தலைமறைவாக இருந்தனர். இவர்களை தீவிரமாக தேடிவந்த சிபிசிஐடி போலீசார் நள்ளிரவில் இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இன்னும் ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் புகழேந்தி, பிரகாஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “சாத்தான்குளம் வியாபாரிகள் சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்த சிபிசிஐடிக்கு பாராட்டுகள். பாதிக்கப்பட்ட தந்தை, மகன் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடியின் நடவடிக்கை அமைந்துள்ளது.
மேலும், எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலையில் கைது செய்யப்பட்ட காவலர்களை கொலை குற்றவாளிகளாக அறிவித்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி முன் ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணை முழுவதையும் தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி நடத்த உயர் நீதிமன்றத்தால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நீதிமன்றம் தூரமாக இருப்பதாலும் தூத்துக்குடி மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் மிகவும் அருகில் மாவட்ட நீதிமன்றம் உள்ள காரணத்தால் தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதிக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.