முடிவுக்குவந்த Concorde சகாப்தம்…
பிரான்சு மற்றும் பிரித்தானியக் கூட்டுத் தயாரிப்பான Concorde 4590 என்ற அதிவேக வானூர்தி, 25.07.2000 அன்று பிரான்சின் CDG வானூர்தித் தளத்திலிருந்து புறப்பட்டு 133 செக்கன்களில் தீப்பிடித்து எரிந்து வீழ்ந்தது.
109 பயணிகளோடு மாலை 15.45 இற்கு அமெரிக்கா நோக்கிப்புறப்பட்ட இவ் விமானமே, அன்றைய நாளில் உலகின் அதிவேகப் பயணிகள் விமானமாகும். 6630 km தூரம்கொண்ட அத்திலாந்திக் சமுத்திரத்தை வெறுமனே 3மணி 20 நிமிட நேரத்தில் (மணிக்கு 2180 km) கடந்துவிடும் இந்த விமானம், தனது ஒரு முறைப்பயணத்திற்கு மட்டும் விழுங்கும் எரிபொருளின் மதிப்பு 11,000 டொலர்கள்.
காலையில் பிரான்சிலிருந்து புறப்படும் ஒருவர் , மதியம் Newyork இல் நடைபெறும் சந்திப்பில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு பிரான்சிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்பதுவே இவ்வானூர்தியின் விளம்பர வாசகங்கள்.
இவ்வானூர்தி விபத்துக்குள்ளான அன்று, 96 யேர்மானியர்கள், ஓர் அமெரிக்கர், ஓர் ஒசுத்திரியா நாட்டைச்சேர்ந்தவர் உள்ளடங்கலாக 110 பேர் பயணித்தார்கள். இதில் பயணித்த யேர்மனியர்கள் அனைவருமே 2900 யேர்மனிய மார்க் (அப்போது யூரோ புழக்கத்திற்கு வரவில்லை) செலவில் அமெரிக்காவின் Newyork இலிருந்து ஈக்வடோர் நாட்டிற்குச்செல்லும் சொகுசு கப்பலான MS Deutschland இல் விடுமுறையைக் களிக்கப் புறப்பட்டவர்கள். பெரும்பலானோர் யேர்மனியச் செல்வந்தர்கள். உலகையே சோகத்திலாழ்த்திய இத்திடுநேர்கைக்கான காரணம் என்னவென்பதை இருபது வருடங்களுக்குப் பிறகு கடந்த 23.05.2020 அன்று அலுவலகமுறைமையில் வெளியிட்டிருந்தார்கள்.
Concorde 4590 வானூர்தி புறப்பட்ட ஓடுபாதையில், அதற்கு முன்பதாகப் புறப்பட்ட அமெரிக்க வானூர்தியான Air Continental இலிருந்து சிறிய அளவிலான உலோகத் தகடொன்று கழன்று வீழ்ந்திருக்கிறது. இந்தத் தகட்டின் மீது வானூர்திச்சக்கரம் உராய்வுற்றுக் கிழிந்த வேகத்திலேயே, சக்கரச் சிதறல்கள் விமானத்தின் கீழுள்ள எரிபொருள் தாங்கியில் பட்டு, அச்சகரத்துகள்களின் அதிகூடிய வெப்பம் ஏற்படுத்திய தாக்கமே தீயை உண்டாக்கி திடுநேர்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 95 தொன் எடையுள்ள 115,000 லீற்றர்கள் எரிபொருள் நிரப்பபட்டிருந்த தாங்கி தீப்பிடித்த மறுகணமே இடதுபுற இயந்திரமும் தீப்பற்ற, மணிக்கு 400 km வேகத்தில் மேலெழுந்துகொண்டிருந்த வானூர்தியை மீள வானூர்தித் தளத்திற்கே திருப்பமுயன்ற ஓட்டிகளின் கட்டுக்கடங்காத Concorde 4590 ஓர் கட்டிடத்தின் மீது வீழ்ந்து நொருங்கியது.
2000 ஆண்டிலேயே 1.3 பில்லியன் டொலர்கள் தயாரிப்புச்செலவு கொண்ட இவ்வானூர்திகளின் சகாப்தம் அன்றோடு முடிவிற்கு வந்தது, NASA வின் விண்ணூர்தியான Appolo விற்கு இணையான வேகம் கொண்டதெனப் புகழப்பட்ட ConCorde இன் இன்னுமொரு வானூர்தி இப்பொழுது பிரான்சின் CDG வானூர்தித் தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மூலம் : Concorde 4590 ஆவணப்படம் – N24
-தேவன்
Rahmania Ar
2