கூட்டணியும் மும்முரம்!
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது மக்கள் சந்திப்புக்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இன்று யாழ்.நகரமெங்கும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆதரவு கோரி பிரச்சாரங்களில் குதித்திருந்தார்.
இப்பிரச்சாரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ்பிறேமசந்திரன்,கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் வேட்பாளர்களும் இணைந்திருந்தனர்.
சர்வதேச சட்டப்படி நாங்கள் ஒரு தனித்துவமான மக்கள் கூட்டம். நாமே இந் நாட்டின் ஆதிக்குடிகள் என்பதைநாம் உரத்துக் கூறிவருகின்றோம்.
அதனால் எம்மை நாமே ஆள எமக்குரித்துண்டு என்பதை தென்னவர்களுக்குக் கூறிவருகின்றோம். அடுத்து நாங்கள் சிலர் போல் முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு நடைபெறவில்லையென்று கூறத்தயாரில்லை.
மாறாக வடமாகாண சபையில் நாம் இயற்றிய இன அழிப்பு தீர்மானத்தை சர்வதேச ரீதியாக நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம்.
மேலும் நல்லாட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறி நாம் ஐ.நா சபையில் இனப்படுகொலையாளிகளை பிணை எடுக்கவில்லை. எடுக்கவும் மாட்டோம்.
தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதற்கு காரணம்இ தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒருசிலர் தாம் நினைத்தபடி முடிவுகளை எந்த விதமான ஆராய்வுகளும் இன்றி எடுத்து அவற்றைநடை முறைப்படுத்தி வந்ததுதான். உலகின் ஆதிக்குடிகளில் ஒன்றான எமது இனத்தின் பிரச்சினை தொடர்பில் எவ்வாறு ஓரிரு நபர்கள் தாம் நினைத்தபடி முடிவுகளை எடுக்க முடியும்? இது எத்தனை ஆபத்தானது?
ஆகவே கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம். உலகம் பூராகவும் பரந்துவாழும் எமது மக்கள் மத்தியில் பல மேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள்.
அவர்களை எல்லாம் உள்வாங்கி நாம் கூட்டாகச் செயற்படுவோம். எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உலகளாவிய சிந்தனை கூடம் ஒன்றையும்இ மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் சமூகமேம்பாடுகளுக்காக ஆய்வு நிறுவனங்கள்இ அபிவிருத்தி நிதியங்களை உருவாக்குவதற்கும் நாம் நடவடிக்கைஎடுப்போம்.
நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையிலேயே நாம் செயற்பட வேண்டும். நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே எமக்கு இனி விடிவைக் கொண்டுவரும். யூதர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே அவர்களின் இன்றைய மேன்மை நிலைக்கு காரணம்.
உலகம் முழுவதும் பணத்துடன் அறிவையும் அவர்கள் மூலதனம் இட்டதுதான் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. நாமும் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும் என்பதை நாம் உணரவேண்டும். எம்மேல் எமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.
அதேவேளைஇ எமது அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை பெறுவதற்காக நாடாளுமன்ற அரசியலை காத்திரமான முறையில் நாம் மேற்கொள்வோம்.
ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் எமது மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ளாமல் அவற்றுக்கு நாம் ஒருபோதும் முண்டுகொடுக்கமாட்டோம். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எமது மக்களின் நலன்களை முன்வைத்து நாம் பேரப்பேச்சுக்களில் ஈடுபடுவோம் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.