மிக மோசமான நிலை இனிமேல் தான்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி அரை மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ள நிலையில், மிக மோசமான நிலை இனிமேல் தான் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பல வியாபித்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதன் மிக மோசமான தாக்கம் இன்னும் வர இருப்பதாக தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.
தற்போதைய சூழலில் அரசாங்கங்கள் சரியான கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும் என்றார் அவர்.
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த பெருந்தொற்று உலகமெங்கும் பரவி, தற்போது 10 மில்லியன் மக்கள் இதன் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கையும் 500,000 கடந்துள்ளது. உலகின் பாதி அளவுக்கான கொரோனா பாதிப்புகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் கொரோனா பரவல் அமெரிக்காவில் வேகமெடுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவையும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்துவிட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.
நாம் அனைவரும் நம் வாழ்க்கையை பழையபடி தொடர விரும்புகிறோம். ஆனால் கடினமான உண்மை என்னவென்றால், இது முடிவடைவதற்கான சூழல் தற்போது அருகில் இல்லை என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தத்தளித்து வந்தாலும், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் உறுதியான நடவடிக்கைகளால் மீண்டுள்ளன என்றார்.