காவல்துறையால் முடியாதாம்: படை களமிறக்கம்!
யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு வன்செயல்களில் ஈடுபடும் கும்பல்களை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரம் படையினருக்கும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதனடிப்படையில் ஆவா குழு என்ற வாள்வெட்டு வன்செயல் குழுவின் தலைவர் என கூறப்படும் வினோதன் என்பவர் இணுவில் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டதுடன்,
இணுவில், கோண்டாவில் பகுதிகளில் அடுத்தடுத்து படையினர் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டிருக்கின்றனர்.
மேலும் யாழ்.மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் வடக்கின் 5 மாவட்டங்களிலும் மணல் கடத்தல், வன்செயல்கள், அடாவடிகள், தொடர்பாக தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் கிளம்பிவரும் நிலையில், பொலிஸார் அவை தொடர்பாக கணக்கில் எடுக்காத நிலை நீடித்து வருகின்றது. மறுபக்கம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மற்றும் கிளிநொச்சி கண்டாவளை பகுதிகளில்
உள்ளுரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக கடந்த 17ம் திகதி யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலமையகத்தில்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் கட்டளை தளபதிகளுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது பொதுமக்களின் இயல்பு வாழ்வை பாதுகாத்தல்,
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் போன்ற இரு விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இதன்போது படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு அதிகாரம் வழங்க தீர்மானம் எட்டப்பட்டது.
இதற்கு அரசாங்கம் ஒப்புதலளித்துள்ள நிலையில் படையினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் வாள்வெட்டு வன்செயல்களில் ஈடுபடுபவர்களை இலக்குவைத்து வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் வழக்கு நிலுவையில் உள்ளவர்களின் வீடுகளுக்கு சென்றும் படையினர் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாகவே கொழும்புத்துறை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம், மற்றும் இணுவில் பகுதியில் ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் வினோதன் என்ற
இளைஞன் கைது செய்யப்பட்டமை, கோண்டாவில் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற படையினரின் சுற்றிவளைப்பு தேடுதல்கள் அமைந்துள்ளன.