இலங்கையில் பிறக்கும் பிள்ளைக்கும் 6 இலட்சம் கடன்?
இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது.நாளைய ஆட்சி இதைவிட மிக கொடூரமானதாக இருக்கும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜேவிபி சார்பு தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி தேவையாகவுள்ள அதேவேளை முதுகெலும்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவை என இ.சந்திரசேகரன் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சந்திரசேகரன் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது.
கொரோனாவுக்கு முதல் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் நாட்டினை கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர். 13 ரில்லியன் கடன் உள்ளது. ஆனால் நாட்டின் சொத்து மதிப்பு 1.6 ரில்லியனே.
பிறக்கப்போற பிள்ளைகளே 6 இலட்சம் கடனுடன் பிறக்கின்றது. ஆனால் ஆள்பவர்கள் தங்களை குபரேன்களாக ஆக்கிக் கொண்டனர்.
ராஜபக்சக்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யப்போவதில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தை தொடர்ந்து வளர்க்கவே முயல்வார்கள். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு ராஜபக்சக்களை புறக்கணிக்க வேண்டும்.
தாமே தேச பற்றாளர்கள் என கூறும் ராஜபக்சக்கள் இன்று 3 ஆயிரம் இராணுவத்தை கொன்றேன் என்பவரை வெளியே விட்டுள்ளார்கள். ஆனால் பல அரசியல் கைதிகளை விடுவிக்க தயாராகவில்லை.
3ஆயிரம் இராணுவத்தை கொன்றேன் என கருணா கூறியதை போல வேறு ஒருவர் கூறியிருந்தால் அவரின் நிலைமை என்ன என்று சிந்தித்துக்கொள்ளுங்கள் எனவும் சந்திரசேகரன் தெரிவித்தார்.