November 21, 2024

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.

கொறொனோத் தொற்று உலகெங்கும் அகலக்கால் பரப்பி உலகைத் துவம்சம் செய்து முடக்கிப்போட்டவேளையில் தொலை நோக்கோடு சிந்திக்கும் தமிழ்க் கல்விக் கழகம் மின்னியற் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திச் சமூக ஊடகங்கள் வழியாகத் தனது கற்பித்தற் பணியை தொலைக்கல்வியாகத் தொடங்கி நடாத்தி வருகிறது.

இந்தக் கல்வித்திட்டத்தை ஏற்கனவேயிருந்த கல்விக்குழுக்களை மேலும் விரிவாக்கம் செய்து மாணவர் பயன்பெறும் வகையிற் கற்பித்துவருவதானது நூற்றியிருபதுக்கு மேற்பட்ட தமிழாலங்களோடு இணைந்துநிற்கும் தமிழ்ப் பெற்றோரிடையே பெரும் வரவேற்பையும் மாணவரிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வேளையில் அனைத்துலகப் பொதுத் தேர்வுக்காலமும் வந்து இணைந்துகொள்ள அரையாண்டுத் தேர்வு மற்றும் மாதாந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் பதினொராம் ஆண்டுவரையான மாணவர்கள் தேர்வு மதிப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளப் பதின்னான்கு ஆண்டுகள் தமிழாலயங்களோடு இணைந்து பயணித்துத் தமிழையும் தமிழரது கலை பண்பாடுகளை கற்றொழுகிப் பன்னிரண்டாம் ஆண்டுக் கற்கையை நிறைவு செய்யும் மாணவச் செல்வங்களுக்கான அனைத்துலகப் பொதுத்தேர்வு திட்டமிட்டவாறு அறிமுறைத்தேர்வும் புலன்மொழிவளத்தேர்வுமாகச் சிறப்பாக இன்று நடைபெற்றது.

யேர்மன் தழுவிய மட்டத்திற் பத்தொன்பது தேர்வு நிலையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. மாணவர்களும் பெற்றோர்கள் தேர்வுக்காக இன்று காலை எட்டு மணிமுதல் நிலையங்களை நோக்கி வருகைதரத் தொடங்கியிருந்தனர். அவர்கள் இன்றை புறச்சூழலுக்கிசைவாக முகக்கவசம் கையுறை என்பவற்றோடு வருகைதந்திருந்தனர். அதேவேளை யேர்மன் அரசின் அறிவுறுத்தலுக்கமையத் தொற்றுநீக்கிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு தேர்வு நிலையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

297 தேர்வாளர்களுக்கான அனைத்துலகப் பொதுத்தேர்வு 9:30 மணிக்கு அகவணக்கத்தோடு தொடங்கித் தமிழாலயகீதம் மற்றும் மாணவர்களுக்கான தேர்வு அறிவுறுத்தல்கள் மீள்நினைவூட்டல் என்பவற்றைத் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு தேர்வாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். 10:00 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டுத் தேர்வுகள் ஆரம்பமாகியது. பத்தொன்பது தேர்வு நிலையங்களில் 130 நடுவர்கள் ஒரேநாளில் இரண்டு தேர்வுகளையும் தமிழ்க் கல்விக் கழகத்தின் திட்டமிடலுக்கு ஏற்பச் சிறப்பாக நடாத்தி முடித்தனர்.

ஐம்பது மற்றும் அறுபது வயதைக் கடந்து விட்டவர்களான ஆசிரியப் பெருந்தகையோர் இந்த பெரும்பணியை ஆற்றும் தற்துணிவோடு களமிறங்கிய காட்சி பார்ப்போரை மெய்சிலிர்கவைக்கக் கூடியது. அதிகாலையில் எழுந்து பல்வேறு நகரங்களில் இருந்து பயணித்து நிலையங்களுக்குக் கொறொனோ அச்சத்தைத் துச்சமெனத் தூக்கியெறிந்துவிட்டுத் வருகைதந்து தேர்வை அர்பணிப்போடு நடாத்தியதூடாகத் தமிழ்ப் பிள்ளைகளின் கல்வியில், அவர்கள் கொண்டுள்ள அக்கறையையும் தமிழுணர்வையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இந்த தேர்வுகளை நடாத்தி முடிப்பதில் நிலையங்களுக்கான இடத்தை பெறுதல் என்பதும் ஒரு முக்கிய வகிபாகமாகும். அதனைச் சிரமேற்று பெற்றுகொடுக்கும் நிர்வாகத்தினரையும் மற்றும் அதற்கிசைவாக ஒத்துழைக்கும் நகர நிர்வாகத்தினரையும் நாம் மறந்துவிட முடியாது.

பதின்னான்ங்கு ஆண்டுகள் எம்மோடு பயணித்த இளவல்களை நாம் பொறுப்பணர்வோடு வழிகாட்டி இன்று மீண்டும் பெற்றோரிடம் கையளிக்கும் வேளையில் அவர்கள் தொடர்ந்து வாழிடக் கல்வியில் சிகரங்களைத்தொட்டு நல்வாழ்வில் இணைந்துகொண்டு, யேர்மனியின் சமூக பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதேவேளை தமிழோடும் பயணிப்பார்கள் என்பதை அவர்கள் இந்தத் தேர்விலே உற்சாகத்தோடு பங்குபற்றியதூடாக நிரூபணமாகிறதெனில் மிகையன்று.

நெருக்கடிகளை எதிர்கொண்டு நிற்கும் சூழலிலும் இனத்தையும் மொழியையும் இருவிழியாய் உவந்தேற்று நிற்கும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நிர்வாகிகள் மற்றும் அனைவரையும் என்றும் பற்றிக்கொண்டு தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவம் நன்றியை பகிர்ந்துகொள்ளும் அதேவேளை, எமது எதிர்காலச் சிறார்களின் நலன்கருதித் தமிழ்க் கல்விக் கழகம் காலச் சூழலுள் கரைந்துபோகாது தன்பணியாற்றுமென்பதை இன்றை நாளும் பதிவுசெய்கிறது.