Mai 12, 2025

அறிக்கை கேட்கிறார் வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி – முகமாலையில் இராணுவத்தால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரைப் பணித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவிக்கையில்,
‘முகமாலை, காரைக்காடு குளப்பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உட்பட அதனோடொட்டியதாக நிகழ்ந்த விடயங்கள் தொடர்பாக அதிக கரிசனை கொண்டிருக்கின்றேன்.
அச்சம்பவம் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.
இந்நிலையில், நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளேன்.
அச்சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணையை முன்னெடுத்து முழுமையான அறிக்கையொன்றை அளிக்குமாறும் கோரியுள்ளேன். அத்துடன் வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அமைதியை சீர்க்குலையக்கூடாது என்பதையும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்’ – என்றார்.