Mai 17, 2024

தேர்தலில் விடுதலைப்புலிகளது மக்கள் பேரவை!

எதிர்வரும் காலங்களில் முஸ்லீம் மக்களினையும் ஒருங்கிணைத்து எமது அரசியல் பயணம் இருக்குமென விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை இறுதி யுத்த கால ஜநா தறப்பாள் கொட்டகையினை தனது சின்னமாக அறிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் மலரவன் தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையினை பெற்றுக்கொடுக்க ஜனநாயக வழியில் செயற்பட எமது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் என்றுமே  ஏனைய கட்சிகளை விமர்ச்சிக்கப்போவதில்லை.குறிப்பாக முன்னாள் போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து அரசியல் பயணத்தை தொடர்வதே எமது விருப்பமாகும்.
குறிப்பாக முன்னாள் போராளிகள் அனைவரையும் ஒன்றிணைந்து தமது கட்சியுடன் பேச வருகை தருமாறு மாவை சேனாதிராசா விடுத்துள்ள அறிவிப்பு காலங்கடத்து பயிர்களிற்கு மருந்து விசிறுவது போன்றதேயென மேலும் தெரிவித்தார்.
ஆனாலும் முன்னாள் போராளிகளை இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தாம் முன்னெடுப்பதாகவும் மலரவன் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே கட்சியின் முக்கியஸ்தரான சி.மகேந்திரன் கருத்து வெளியிடுகையில் எமது கட்சியை பதிவு செய்ய கடந்த பெப்ரவரி 14ம் திகதி எம்மால் ஆவணங்கள் தேர்தல் ஆணையகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை பெயரில் கிளைகளை திறந்து செயற்பட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலில் ஈடுபடும் உரிமையை எமக்கு இந்த அரசு மறுதலிக்கமாட்டாதென நாம் நம்புகின்றோம்.
யுத்த அவலத்தின் மத்தியில் முன்னாள் போராளிகள்,காயமடைந்த போராளிகள்,அவர்களது குடும்பங்கள் ,மாவீரர் குடும்பங்கள் திண்டாடிவருகின்றன.
ஆனால் புலிகளது பெருமளவிலான சொத்துக்களை புலிகளது பினாமிகள் புலம்பெயர் நாடுகளில் அனுபவித்துவருகின்றனர்.
அவை மீள பெறப்பட்டு அவல வாழ்வை வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகள்,காயமடைந்த போராளிகள்,மாவீரர் குடும்பங்களது வாழ்வை மேம்படுத்த பயன்படுத்தப்படவேண்டும்.
இத்தேர்தலில் எமது மக்கள் எம்மை வெற்றியடைய செய்வதன் மூலம் நாடாளுமன்றில் எமது குரல் ஒலிப்பதை உறுதிப்படுத்துவார்களென நம்புவதாக தெரிவித்தார்.