November 22, 2024

ஐ.தே.கட்சியில் இருந்து 99 பேர் நீக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு 22ஆம் திகதி

ரஞ்சித் மத்துமபண்டார உட்பட 99 பேரை ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியமைக்கு தடைவிதிப்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த வழக்கு இரண்டாவது நாளாகவும் கொழும்பு மாவட்ட நீதிபதி அமாலி ரணவீர முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் பிரதிவாதியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கின் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களை பெயரிடாமையானது பாரதூரமான சட்ட குறைப்பாடு என சுட்டிக்காட்டியுள்ளார்.

முறைப்பாட்டாளர்கள், ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவின் உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்திற்கு அமையவே கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டனர் எனவும், இதனால் இந்த தடையுத்தரவு செயற்குழுவின் உறுப்பினர்களுக்கே விதிக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தடையுத்தரவை பிறப்பிக்கும் இயலுமை நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.