தீர்வு கிடைக்கும்:சி.வி.ஆரூடம்!
கொழும்பில் இருக்கும் போது பல வருடங்களாக சமய சமூக மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசி வந்தீர்கள். தற்போது அரசியலில் இறங்கியதால் அரசியல் காரணங்களுக்காக உங்கள் பேருக்குக் களங்கம் ஏற்படுத்தி வருகின்றார்கள். உங்கள் சமய அறிவுப்படி அரசியல் அனுபவத்தின்படி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிட்டுமா?
சி.வி.விக்கினேஸ்வரன் :நிச்சயமாக! நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும் தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது இனி எந்நாளும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை. அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதே போல்த்தான் இதுவும். தமிழர்கள் மாண்புடன் வாழும் காலம் கட்டாயம் வரும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விக்கு சமய ரீதியாகப் பதில் கூறுவதானது என்னை அரசியல் ரீதியாகப் பாதிக்கும். என்றாலும் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதில்களை பயப்படாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். அந்த அடிப்படையில் பதில் இறுக்கின்றேன்.
தத்துவஞானம், சமயஞானம் பெற்றவர்கள் உலகைப் பார்க்கும் விதம் வேறு அரசியல்வாதிகள் பார்க்கும் பார்வை வேறு. அதை நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சீதாப்பிராட்டியாரின் தந்தை ஜனகமகாராஜா ஒரு ஆத்மஞானி. ஆனால் அரசர். அவ்வாறானவர்களின் மனமானது தாமரை இலை மேல் தண்ணீர் போல் இருப்பன. பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும்.
மகாபாரதத்தின் யுதிர்~;டிரர் பற்றி ஒரு கதை உண்டு. அவருக்கு இரண்டு நண்பர்கள். தர்மரின் ஆன்ம தந்தையாரான யமதர்மராஜன் மகனைத் தன் மானிட உடலுடன் மேல் உலகம் எடுத்துச் செல்ல விரும்புகின்றார். தர்மரிடம் இதைக் கூறுகின்றார். அப்போது தர்மர் “ என் இந்த இரு நண்பர்களையும் உடன் கூட்டிவருவேன். அதற்கு நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் வருகின்றேன்” என்றார். “அது எப்படி? அவர்களுக்கு சுவர்க்கம் அடைய இன்னும் காலம் வரவில்லையே?” என்று கூறினார் யமதர்மராஜர். “அப்படியானால் நான் வரவில்லை. நீங்கள் என்னை மற்றவர்கள் போல் அழைத்துச் செல்லலாம்” என்றார் தர்மர். சரியென்று நண்பர்களையும் அழைத்துச் செல்ல உடன்படுகின்றார் யமதர்மராஜார். தர்மர் முதலில் மேல் நோக்கிச் செல்வார். மற்றவர் ஒருவர் தர்மரின் காலைப் பற்றிக் கொள்ள வேண்டும். அவரின் காலை மூன்றாமவர் பற்றிக் கொண்டு மேல் செல்லலாம் என்று உடன்பாடு எய்தப்பட்டது.
சுவர்க்கப் பயணம் தொடங்கியது. மூன்று பேரும் மேலெழுந்து செல்கின்றார்கள். உடனே யமன் ஒரு வேடன் ரூபம் எடுத்து மர உச்சியில் இருந்த ஒரு அழகான பறவையை அம்பெய்து கொல்கின்றார். பறவை பிணமாக விழுகின்றது. மேல் போய்க் கொண்டிருக்கும் மூன்றாமவர் உடனே “ அட பாதகா! அநியாயமாக அந்தப் பறவையைக் கொன்று விட்டாயே” என்று கோபத்தில் அலறுகின்றார். அவர் தமது கோபத்தால் தமது பிடியைத் தளர்த்தி மேலிருந்து கீழே விழுந்து விடுகின்றார். இரண்டாமவர் “அடபாவமே! இந்த அழகான பறவை கொல்லப்பட்டுவிட்டதே. என்னே இவன் கொடூரமான செயல்?” என்று பரிதாபப்படுகின்றார். அவரின் மனவருத்தத்தால் அவரின் பிடி தளர்ந்து அவரும் விழுகின்றார். தர்மரோ தனியே சுவர்க்கம் நோக்கி செல்கின்றார். அவரின் மனதில் சலனம் இல்லை. அவர் மனோநிலை வேறு. உலக நடப்பைக் காண்கின்றார். கொல்வதும் உண்பதும் வேடர் வாழ்க்கை. வாழ்வதும் மடிவதும் உலக வாழ்க்கை. உலகின் நடத்தைகளைக் கண்ணெதிரே கண்டும் அவர் தம்மை அவற்றோடு இணைத்துவிடவில்லை. உலகைச் சாட்சியாகப் பார்க்கப் பழகிக் கொண்டிருந்தார். அது தான் சாட்சி ஃபாவம் என்பது. அவருக்குக் கோபமும் இல்லை. பரிதாபமும் இல்லை. தாமரை மேல் நீர் என்பது இதைத்தான்.
கணியன் பூங்குன்றனார் புறநானூற்றில் கூறுகின்றார். “வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே – முனிவின் இன்னாதென்றலும் இலமே” என்று. அதாவது யாம் வாழ்தலை இனிதென்று மகிழ்வதும் இல்லை. யாம் வெறுப்பால் வாழ்வு இனியாது என்று இருப்பதும் இல்லை என்கிறார்.
ஏன் இதைக் கூறுகின்றேன் என்றால் ஆன்ம ஞானம் பெற்ற ஒருவரின் மனம் சலனமடையாமல் தாமரை இலை மேல் தண்ணீர் போல் இருக்கும். ஆனால் அரசியல் ஞானம் மட்டும் பெற்ற ஒருவர் எதனையும் எதிர்வினையுடனே தான் பார்ப்பார். எதனையுங் கண்டு அதற்குப் பதில் உரைக்கவும் போட்டி நடவடிக்கை எடுக்கவுமே பார்ப்பார். அவரால் அதற்கு அப்பால் பார்க்க முடியாது. ஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் அளிக்கும் போது ஆன்ம ஞானம் பெற்ற ஒருவர் ஒரு விதமாகவும் அரசியல் ஞானம் பெற்றவர் இன்னொரு விதமாகவும் பதில் இறுப்பது தவிர்க்க முடியாதது.
பல ஆன்ம குருமார்களிடம் இருந்து உபதேசம் பெற்ற ஒருவரின் பதில் அரசியலையும் உள்ளடக்கிய பிரபஞ்சப் பார்வையுடனானதாக இருக்கும் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அரசியல்வாதிகளின் பார்வை அதில் ஒரு சிறு கோணமே தவிர முழுமைபெற்ற பார்வையன்று.
இனி கேள்விக்கு வருவோம்.
தமிழ் மக்களுக்குத் தீர்வு கிட்டுமா?
ஆன்மீக அடிப்படையில் பார்ப்பதென்றால் பல கோணங்களில் இருந்து இது பார்க்கப்படவேண்டும். எமக்;கு வேண்டுபவை இவை தான்; என்று ஒரு சாரார் கூறும் போது தமக்கு வேண்டுபவை இவையென இன்னொரு சாரார் கூறுவது தான் உலக வழக்கம். இது இருமையின் தாக்கம். நல்லது – கெட்டது, நன்மை – தீமை, வெள்ளை – கறுப்பு என்று பிரிவினையுடன் தான் நாம் மானிடர்களாய் சிந்திக்கின்றோம். அதனால்த்தான் உலகத்தில் கருத்து வேற்றுமைகளும் கலவரங்களும் உண்டாகின்றன. இவற்றிற்கு அடிப்படையாக இருப்பது சுயநலமே. அது அகந்தை பாற்பட்டது. தரப்பார் ஒவ்வொருவரும் விட்டுக் கொடுக்காது இருந்தால் அவர்களிடையே இருக்கும் பிணக்கு தீராது. பதிலாக அது வலுவடையும். இதை இருதரப்பாரும் உணர வேண்டும். ஆனால் உணர்ந்தும் தமது சுயநல சிந்தனைகளில் இருந்து விடுபட முடியாமல் அவர்களைத் தடுப்பது அவர்களின் கர்மவினை. காலம் கனியும் போது கர்மவினையின் தாக்கம் குறையும். திடீரென நிலைமை மாறும். அந்த மாற்று நிலை விரைவில் வரும் என்பது எனது கணிப்பு.
சில நாட்களுக்கு முன்பதான பத்திரிகையின் படி கௌரவ பிரதம மந்திரி மகிந்த இராஜபக்ச அவர்கள் தமிழர்களுக்கான தீர்வைத் தான் மட்டுந்தான் தரமுடியும் என்று கூறியுள்ளார். அது அவரால் முடியாது. ஏன் என்றால் அவருக்குத் தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே தெரியாது. பின் எப்படி தமிழர்களின் பிரச்சனைக்குத் தானே தீர்வைத் தரப் போவதாக அறிவிப்பது? எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியாலும் தமிழர்களுக்கான தீர்வைத் தர முடியாது. அப்படி தருவதானால் அவர்கள் பின்வரும் உண்மைகளை ஏற்க வேண்டியிருக்கும். அவர்களால் அவற்றை, ஏற்க முடியாது. அவர்களின் அகந்தை, அறியாமை போன்றவை அதற்கு இடம் கொடுக்காது.
அவையாவன –
1. இந் நாட்டின் பூர்வீகக் குடிகள் சைவத் தமிழரே. சரித்திர ரீதியாக இதில் எந்த வித மயக்கமும் இல்லை.
2. அவர்கள் தொடர்ந்து இலங்கையின் மேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
3. மகாவம்சம் வரலாற்று நூல் அன்று. அது பௌத்தத்தை மாண்புறச் செய்ய எழுதப்பட்ட புனை கதை. அது பாளியில் எழுதப்பட்டது. அது எழுதப்பட்ட போது சிங்களவர்களும் இருக்கவில்லை, சிங்கள மொழியும் இருக்கவில்லை.
4. சிங்கள மொழி ஒரு மொழியாக பரிணாமம் பெற்றது கி.பி. 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே.
5. பிரிட்டி~hர் 1833ல் நாட்டை நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் வரையில் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கென இராஜ்ஜியங்களை அமைத்து வடக்கு கிழக்கில் 3000 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து குடியிருந்து வந்துள்ளார்கள். கிழக்கில் கண்டி அரசர்களுக்கு சில சமயங்களில் திறை செலுத்தினாலும் கிழக்கில் வாழ்ந்து வந்தவர்கள் தமிழரே.
6. இது வரையில் தமிழர்க்கு எதிராக நடந்து வந்திருப்பது இனப்படுகொலையே.
இவற்றை ஏற்காது எந்தச் சிங்களத் தலைவராலும் தமிழர் எதிர் பார்க்கும் தீர்வைத் தரமுடியாது. வேண்டுமானால் இவ்வளவுதான் தரலாம் என்று தமது எச்சில் இலையில் உள்ள எலும்புகளை எமக்குத் தூக்கிப் போடலாம். தமிழர்கள் சிலர் அதனை ஏற்கச் சித்தமாக உள்ளார்கள். ஆனால் பெரும்பான்மைத் தமிழர்கள் தம்முடைய மாண்பையும் மதிப்பையும் நெடிய இருப்பையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்வையே ஏற்றுக் கொள்வார்கள். ஐரோப்பாவில் 100 வருடப் போர் நடந்தது. அயர்லாந்து மக்கள் பல வருடகாலம் போர் புரிந்து வந்துள்ளார்கள். அதே போன்று தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறும் வரையில் போராடுவார்கள். தமிழர்கள் தமக்கிருக்கும் உண்மையான, நீதியான, நியாயமான உரித்துக்களை முன்வைத்தே தமது தீர்வுகளைக் கேட்கின்றனர். அதனை வழங்காது சிங்களத் தலைவர்கள் ஏமாற்றி வந்தால் 100 வருடத்திற்கும் தொடர்ந்து போராட்டம் நடத்த தமிழ் மக்கள் உள்ளுறுதி கொண்டிருக்கின்றனர். கேப்பாப்பிலவு மக்களின் மன உறுதியையும் விடா முயற்சியையும் உலகம் அறியும். இன்று நாளை நாங்கள் போய்விடலாம். ஆனால் எமது வம்சத்தில் உதிப்பவர்கள் 100 வருடத்திற்கு மேலும் போராட்டத்தை நடத்துவார்கள் – தமது நீதியான உரித்துக்கள் கிடைக்கும் வரை!
இதனை உணர்ந்து சிங்களத் தலைவர்கள் நியாயமான தீர்வொன்றை வெகுவிரைவில் கொண்டு வந்து அதன் அடிப்படையில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காரணம் அவர்களுக்கு உலக நெருக்குதல்கள் கூடிக் கொண்டு வருகின்றன. பொருளாதாரம் சிதைந்து வருகின்றது. தமிழர்களுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் தாம் இன்னொரு நாட்டின் அடிமையாக நேரிடும் என்ற பயம் பீடித்துள்ளது. எமது புலம்பெயர் மக்களின் இன வழியான ஈடுபாடு அவர்களை மலைக்க வைத்துள்ளது. இவற்றைவிட தாம் இதுகாறும் தமிழர்களுக்கு இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் இடைஞ்சல்களையும் கொடுத்து வந்துள்ளோம் என்ற எண்ணம் இவர்களிடையே மேலோங்கி வருகின்றது. இனப்படுகொலையை ஏற்காவிட்டாலும் படுகொலைகள் பல தமிழர்க்கெதிராக தம்மால் நடாத்தப்பட்டன என்ற உண்மை அவர்களுள் உறைக்கத் தொடங்கியுள்ளது. இதனைச் சிங்கள சகோதர சகோதரிகளே அவர்களுக்கு இடித்துரைத்து வருகின்றனர். சில வருடங்களுள் ஒரு சிறந்த தீர்வை எதிர்பார்க்கலாம் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.