இலங்கையில் 263,412 பேருக்கு வேலையில்லை?
இலங்கையின் கொவிட் 19 நெருக்கடிச் சூழலால், 263,412 பேர் தொழிலை இழந்துள்ளனர் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார்.
தொழில் திணைக்களம், 2,700 தொழில் நிறுவனங்களில் முன்னெடுத்த ஆய்வுகளுக்கு அமைய, அந்நிறுவனங்களில் கொரோனாவுக்கு முன்னர் 3,76 388 பேர் பணிபுரிந்துள்ள நிலையில், மே மாதமளவில் 263,412 பேருக்கு பணிகளையும் கொடுப்பனவுகளையும் வழங்க முடியாது போயுள்ளமை தெரியவந்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தொழில் திணைக்களத்தின் இந்த அறிக்கை, அமைச்சரவைக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கமைய, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பாரியளவில் பொருளாதார பாதிப்புக்கு முகங்கொடுத்துள்ளன என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மொத்த, சில்லறை விற்பனை நிலையங்களில், 32,842 பேரில் மே 20,048 பேருக்கு தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஹோட்டல் போன்ற துறைகளில் மே மாதத்துக்கு முன்னர் 24,324 பேர் பணிகளுக்கு அமர்த்தப்பட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட நிலையில், மே மாதம் இதன் எண்ணிக்கை 19,730 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
அதேப்போல் 7,483 பேர் கட்டடத் துறையில் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர் எனத் தெரிவித்த ஹர்ஷ டீ சில்வா, தொழில் திணைக்களத்தின் அறிக்கைகளுக்கமைய 90 சதவீதமானோர் தொழிலின்றி, சம்பளமின்றி இருப்பதாகவும் எனவே இவர்கள் மாதாந்தம் செலுத்தப்பட வேண்டிய கடனட்டை, லீசிங், கடன் உள்ளிட்டவைகளை செலுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.