கொலை கொலையாம் காரணமாம்?
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து வைத்தியர் ஒருவர் 79 இலட்சம் ரூபாவை கொள்ளையிட மேற்கொண்ட முயற்சியை முறியடித்த அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இந்த கொள்ளைச்சம்பவம் நடந்தது.
மாறுவேடமிட்டபடி வந்த வைத்தியர் (விளையாட்டு) துப்பாக்கி முனையில் 79 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டு தப்பிச் சென்றார். அப்போது வைத்தியசாலையில் சிவில் உடையில் கடமையிலிருந்த அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர்கள் இருவர், கொள்ளையரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். அந்த சமயத்தில் வாகனத்தில் வந்த மாத்தறை சிறுவர் பெண்கள் விவகார பணியகத்தை சேர்ந்த பெண் அதிகாரியும் அதில் தலையிட்டார். எனினும், இந்த முறியடிப்பில் முக்கிய பங்காற்றிய இரண்டு அரச புலனாய்வுத்துறை உத்தியோகத்தர்களின் பங்கும் வெளிவராமல் போனது.
இந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி பம்பலப்பிட்டி, ஹவ்லொக் லேன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற மேற்படி புலனாய்வு உத்தியோகத்தரையும், இன்னொருவரையும் டிப்பெண்டர் வாகனமொன்று மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (14) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அரச புலனாய்வுத்துறையில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரான அழகப்பெரும (93 666) என்பவரே உயிரிழந்துள்ளார்.