பிரித்தானியாவில் வரும் 15-ஆம் திகதி முதல் இது கட்டாயம்! மீறினால் அபராதம்!
பிரித்தானியாவில் வரும் திங்கட் கிழமை பொது போக்குவரத்துக்களில் முகக்கவசங்களை அணியாதவர்கள் அபாரதம் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து செயலாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பிரித்தானியாவை தாக்கவிடக் கூடாது என்பதற்காக, அந்நாட்டு அரசு இந்த வாரத்தின் துவக்கத்தில் இருந்தே பல்வேறு புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதன் படி கடந்த 8-ஆம் திகதி முதல் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினர் நிச்சயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர், அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி லண்டனில் கொரோனாவின் பாதிப்பும் தீவிரமாக இருப்பதன் காரணமாகவும், அங்கு மக்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதன் காரணமாகவும், இங்கிருக்கும் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணியும் படி அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது நாட்டில் வரும் திங்கட் கிழமை முதல் பொதுபோக்குவரத்துகள், அதாவது, பேருந்துகள், ரயில்கள், Tram-கள் மற்றும் விமானங்களில் செல்லும் போது முகக்கவசங்களை அணிந்து செல்ல வேண்டும், அப்படி முகத்தை மறைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று போக்குவரத்து செயலாளர் Grant Shapps செய்தியாளர்கள் சந்திப்பின் போது உறுதிபடுத்தினார்.
மேலும், அவர் முகக்கவசங்கள் அணிவதற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பது தெரியும், அவர்கள் சக பயணிகள் மீது அக்கறை கொண்டுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
இருப்பினும், யாரேனும் ஒருவர் முகக்கவசம் அணியாமல் சென்றால், அவர்கள் பயணம் செய்ய முடியாமல் போகலாம், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் போகலாம், இது பொது சுகாதார சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
முகக் கவசங்கள் அணிய வேண்டியதன் அவசியத்தை பயணிகளுக்கு நினைவுபடுத்துவதற்காக, புதிய விதிகள் பற்றி அறிவதற்காகவும், சமூக ஊடகங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்.
உங்கள் முகத்தை மூடுவதை எப்போதும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் பணப்பை மற்றும் தொலைப்பேசியை எப்படி மறக்காமல் எடுப்பீர்களோ அதே போன்று முகக்கவசமும் அவசியமாக இருக்க வேண்டும்.
முகக்கவசம் இருப்பதை உறுதிசெய்து சகப் பயணிகளின் பாதுகாப்பிற்கு உதவும் படி கூறியுள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு 100 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் எப்போதும் தங்களுடன் முக்கவங்களை வைத்து கொள்ளுங்கள், கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் இதுவரை 41,481-பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.