ஜநாவுக்கு பதில் எழுத தொடங்கினார் கோத்தா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் இலங்கையில் கருத்துசுதந்திரம் குறித்து வெளியிட்ட கரிசனைகளை நிராகரித்து அரசாங்கம் அவரிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகளிற்கான பதில் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி டயானி மென்டிஸ் இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
குறிப்பிட்ட கடிதத்தில் அவர் ,ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர், கொவிட் 19 சூழலில் கருத்துசுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறும் நாடுகளில் இலங்கையும் உள்ளது என தெரிவித்துள்ளமை குறித்து கரிசனை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களை பாதுகாப்பதற்காக பிழையான போலியான தகவல்களிற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கவேண்டியது அனைத்து நாடுகளுக்கும் அரசாங்கங்களிற்கும் அவசியமான விடயமாக மாறியுள்ளது குறிப்பாக கொரோனா வைரஸ் சூழலில் இது அவசியமானதாக மாறியுள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகளிற்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி டயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
மே 18 ம் திகதி உலக சுகாதார சபையில் எட்டப்பட்ட கருத்துடன்பாட்டுடன் கூடிய தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ள கருத்து குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அறிக்கையில் தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகளிற்கான பதில் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி டயானி மென்டிஸ் அதற்கு விளக்கமளித்துள்ளார்.
தில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவு வெறுமனே விமர்சனங்களை முன்வைப்பவர்களை கைதுசெய்யமாறு அமைந்திருக்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கையின் பதில் வதிவிடப்பிரதிநி போலியான பொய்யா செய்திகளை பரப்புபவர்களை கைதுசெய்யுமாறும் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பொருத்தமான சட்டங்களை மீறினால்,அரச ஊழியர் ஒருவர் தனது பணியினை மேற்கொள்வதை தடுத்தால்,அரச ஊழியரை தவறான விதத்தில் கட்டுப்படுத்தினால்,அரச ஊழியர் தனது பணியை செய்வதை தடுப்பதற்காக குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டால், தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினால்,கணிணி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி பொது ஒழுங்கை மீறினால், தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினால் மாத்திரமே நடவடிக்கை எடுக்குமாறு பதில்பொலிஸமா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சர்வதேச நோய் தொற்றினை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய சவால்களுடன் தொடர்புபட்ட பல்வேறு ஏனைய சவால்களிற்கு மத்தியிலும் இலங்கை பல மாதங்களாக தனது மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினாலேயே பாரட்டப்பட்ட அரசாங்கத்தின் வெற்றிகள் காரணமாக இந்த மிகவும் ஆபத்தான நோயை கட்டுப்படுத்த முடிந்துள்ளதுடன் மோசமாக பாதிக்கப்படக்கூடிய மக்களையும் காப்பாற்ற முடிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்புடனும் பொதுமக்களிற்கு உண்மையான துல்லியமான தகவல்களை வழங்கியதன் மூலமும் இது அதிகளவிற்கு சாத்தியமானது என தனது கடிதத்தில் இலங்கையின் பதில் வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை சட்டத்தின் உரிய நடைமுறைகளை பின்பற்றியும்,பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பு நலன்களை கருத்தில்கொண்டும்,நோய்தொற்றின் போது தீமையை ஏற்படுத்திய அல்லது அனைத்து சமூகத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொய்களை களையும் நோக்கத்துடனும் எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசமைப்பின் கீழ் மனித உரிமைகளை பாதுகாப்பு ஊக்குவிப்பது குறித்த இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை உலக நாடுகள் எதிர்கொள்ளும் முன்னொருபோதும் இல்லாத சவால்கள் குறித்து உணர்பூர்வமாக காணப்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.