Dezember 3, 2024

தமிழரசு குடுமிப்பிடி:கூட்டத்தை குழப்ப முயற்சி!

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.கிளை கூட்டத்தை தடுத்து நிறுத்த போட்டுக்கொடுத்தவர்கள் யாரென்பதில் கட்சிக்குள் சச்சரவு ஆரம்பித்துள்ளது.
யாழ்.மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் கிளைக் கூட்டம் இடம்பெறுவதனால் அதனை தடுத்து நிறுத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளைக் கூட்டம் நேற்றுமாலை இடம்பெறவிருந்த நிலையில் இருவர் சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கொரோனா காரணமாக சுகாதார முன்னெச்சரிக்கையின் கீழ் தடுத்து நிறுத்துமாறு கோரியிருந்தனராம்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணம் பொலிசாரும் சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு குறித்த கூட்டத்தினை தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
இதனையடுத்து நேற்றுக்காலை தமிழ் அரசுக் கட்சியின் தலமை அலுவலகம் அமைந்துள்ள மாட்டீன் வீதி அலுவலகத்திற்குச் சென்ற சுகாதார வைத்திய அதிகாரி குறித்த கலந்துரையாடலின் விபரத்தினையும் அதில் பங்குகொள்வோர் எண்ணிக்கையினையும் கேட்டறிந்த நிலையில் அங்கே பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள. தொடர்பான அறிவுறுத்தலையும் வழங்கிச் சென்றார்.
அதன் பிரகாரம் தற்போது 60 முதல் 100 பேர் வரையில் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிகளிலும் உள்ள கிளைகளில் இருந்து தலா ஐவர் வீதம் மொத்தமாக 50 பேரே அங்கம் வகிப்பதனால் 100 வீத வரவு உறுதி செய்யப்பட்டாலும் 50 பேர் என்ற எண்ணிக்கையினை தாண்டாது என்ற விபரமும் தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் நடாத்த தடை இல்லை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உள்வீட்டு முரண்பாட்டாலேயே தடுத்து நிறுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது.