வடபகுதியில் காணிகளை அபகரிக்கும் இராணுவம்!
மக்களுடைய காணிகளை பெற்று இராணுவத்தினர் பயிர் செய்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் இவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து மக்களின் காணிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை கோரி இராணுவத்தினர் கடிதங்களை எழுதி இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பல காணிகளை அவர்கள் அடையாளம் கண்டு பொதுமக்கள் மிக நீண்ட காலமாக தங்களது காணிகள் என்று ஆண்டு அனுபவித்த காணிகளை தங்களுக்கு தருமாறு நேரடியாகப் பிரதேச செயலகங்களில் கோரி இருக்கிறார்கள்.
இவ்வாறு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் கோரப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும் கோரப்பட்டுள்ளது என்ற தகவல்கள் கிடைகின்றன. அத்துடன் 300க்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளை தங்களுக்கு தருமாறு கோரபட்டதாக தெரியவருகின்றது. புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் நீண்ட காலமாக ஆண்டு அனுபவித்த காணிகளைத் தருமாறும் கோரப்பட்டுள்ளது.
இதன் பின் புலத்தை பார்க்கும் பொழுது இந்த கொரோனா வைரஸ் காலத்தில் வெறுமனே இருக்கும் காணிகளை விவசாயம் செய்யும் நோக்கில் தான் இராணுவத்தினர் பெற்றுக்கொள்வதாக தெரிய வருகின்றது. எனவே இந்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு எமது மக்கள் ஆண்டு அனுபவித்த காணிகளை இவர்கள் தங்களுக்கு கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
பிரதேச செயலகத்தில் இருந்து காணிகளை தருமாறு கோருகின்ற அந்தக் காணிகள் வனவள பிரிவு இதுவரை காலமும் எமது மக்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் காணிகள் அந்த காணிகளை அவர்களுக்கு விடுவித்து தரப்படவேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டன.
இதில் ஒரு விடயம் வெளிப்படுகின்றது இராணுவம் இந்த கொரோனா காலத்தை காரணம் காட்டி எமது பொதுமக்களின் காணிகளை வனவள பிரிவின் துணையுடன் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
எனவே இந்த விடயத்தில் மக்கள் விவசாயம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஊக்குவிப்பு செய்யப்பட வேண்டும் அதுதான் அரசின் கடமை தற்போது அரசின் கடமை இங்குள்ள மக்கள் விவசாயம் செய்வதற்காக ஊக்குவிக்கப்பட வேண்டும் அதுதான் அதற்கான கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர எமது மக்களின் காணிகளை இராணுவத்தினர் தாங்கள் பயிர்ச்செய்கையை செய்வதோ அல்லது தங்களது தேவைகளுக்கு கொரோனாவை காரணம் காட்டி பாவிக்க முற்படுவதோ பாரிய ஒரு பின்விளைவை இந்த மண்ணில் கொண்டுவரும் என்பதை அவர்கள் நினைத்து கொள்ள வேண்டும்.
இந்த மண்ணை அபகரிக்க முற்பட்ட போதுதான் முப்பது வருட யுத்தம் இந்த மண்ணில் வெடித்திருந்தது எனவே எமது இந்த மக்களின் காணிகள் புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவு முகாம் அமைக்கப்பட்டுள்ள காணி வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் கிழக்கில் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ள காணி இப்படியாக பல்வேறு காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் எமது மக்கள் தங்களுக்கு எடுக்க முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
அப்படி இருக்கின்ற போது மீண்டும் இந்த கொரோனாவை காரணம் காட்டி இவர்கள் இந்த காணிகளை அபகரிக்க முற்படுவது பாரிய பின்விளைவுகளை எங்களது மக்களுக்கு ஏற்படுத்தப் போகின்றது எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் உங்களுடைய காணிகளை நீங்கள் ஆண்டு அனுபவிக்க வேண்டும்.
அதே போன்று அரசாங்க அதிகாரிகளும் எமது மக்களுடைய காணிகளை வனவள திணைக்களத்திடம் இருந்து விடுவித்து எமது மக்களுக்கு வழங்க வேண்டுமே தவிர எக்காரணம் கொண்டும் இராணுவத்திற்கு இந்த காணிகளை கொடுப்பது ஒரு அநியாயமான செயலாக இருக்கும்.
இப்படியான ஒரு விடயத்தை இவர்கள் தென்பகுதியில் செய்வார்களா தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களின் காணிகளை இராணுவம் கையகப் படுத்த முடியுமா கொடுப்பார்களா இல்லை எனவே வட பகுதியில் இப்படி ஒரு அணியாய செயற்பாடுகள் நடப்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என தெரிவித்தார்