தோல் இருக்க சுளை விழுங்கிகள்?
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் – பூநகரி வீதியில் 14 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்பு பாகங்கள் அடையாளந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன.
இதனால் யாழ்ப்பாணத்திற்கான குறைந்த தூரத்தைக் கொண்ட குறித்த தரைவழிப்பாதை ஊடான கனரக வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
நாளாந்தம் அதிக மக்கள் பயன்பாடுடைய இந்த பாலத்தின் பாகங்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது களவாடப்பட்டு இரும்புக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் உள்ள இரும்புக் கடை ஒன்றில் இப் பாலத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு களவாடப்பட்டுள்ள இரும்பு பாகங்களின் பெறுமதி 10 – 15 மில்லியன் ரூபா பெறுமதி என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் இளங்கீரன் தெரிவித்துள்ளார்.
களவாடப்பட்டுள்ள குறித்த இருப்புப்பாலம் பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர் இந்தப் பாலத்திற்கு ஏற்கனவே நாட்டின் எப் பாகத்திலாவது கழட்டப்பட்ட பாலத்தின் பாகங்கள் இருந்தால் கொழும்பிலிருந்து அதனைப் பெற்றுப் பொருத்த முடியும் எனவும் இல்லையெனில் பாலத்தின் ஊடான போக்குவரத்து கேள்விக்குறியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து பூநகரிக்கு செல்கின்ற குடி நீர்த்தாங்கி முதல் யாழ்ப்பாணம் செல்கின்ற கனரக வாகனங்கள் பேருந்துகள் என்பன குறித்த பாலத்தின் ஊடாகவே போக்குவரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது இதனூடாக பயணிப்பது மிகவும் ஆபத்தானதாகும் என்று பிரதம பொறியியலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.