முன்னணி,வாழ்வுரிமை தரப்புக்கள் அச்சுறுத்தலில்!
தமிழ் தேசிய விடுதலை சார்ந்து செயற்படும் தரப்புக்களை இலக்கு வைத்து இலங்கை அரசு தனது கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தலைமையக சூழலில் படையினரது பிரசன்னம் அதிகரிக்கப்பட்டு கெடுபிடிகள் இன்று முன்னெடுக்கப்பட்டதாக கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கு மாவீரர் தினம் அனுஸ்டிக்க ஏற்பாடு மேற்கொண்டமை தொடர்பாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினுடைய தலைவர் சிவகரன் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சுமார் இரண்டு மணிநேரம் அவர் விசாரணைக்கு உள்ளாகியிருந்தார்.
விசாரணையின் போது தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் நிகழ்வை தொடர்சியாக அரசாங்கத்துக்கு எதிராக நடாத்திவருகின்றமை தொடர்பாக சிவகரனிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளது.
நினைவு கூரல் தண்டனைக்குரிய குற்றம் எனவும் இனி வரும் நாட்களில் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்வோம் எனவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் சிவகரன் தெரிவித்துள்ளார்.