November 21, 2024

பஸிலிற்கும் இரட்டை பிரஜாவுரிமை:ரட்ணஜீவன் ஹூல்

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எனத் தெரிவித்த அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன் உறுப்பினராகத் தெரிவு செய்தாரென, முன்னாள் ஜனாதிபதியிடமே சட்டத்தரணி சாகர காரியவசம் கேட்க வேண்டும் என்றார்.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென்றால், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் எவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவில் உறுப்பினராக இருக்க முடியுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளமைத் தொடர்பில் , அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனக்கு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளது உண்மையே. அமெரிக்கா மற்றும் இலங்கை இரட்டைப் பிரஜாவுரிமை தனக்கு உள்ளது எனத் தெரிவித்த அவர், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவர் தேர்தல் ஆணைகுழுவின் உறுப்பினராக இருக்கக் கூடாதென்று எந்தவொரு சட்டத்திலும் கூறப்படவில்லை. சட்டத்தில் தடையுமில்லை என்றார்.
அத்துடன், இந்தக் கேள்வியை எழுப்பியவரது கட்சியின் முக்கிய முடிவுகள், தீர்மானங்களை எடுக்கும் முன்னாள்  அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இரட்டைப் பிரஜாவுரிமை உடைய ஒருவரே என்றும் எனவே, தன்னுடைய கட்சியில் இரட்டைப் பிரஜாவுரிமையுடைவரை முக்கிய பங்குகளில் வைத்துக்கொண்டு, எங்கள் விடயங்களில் ஏன் தலையிடுகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.