ட்ரம்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பல நாடுகள் : சீனாவின் நிலை கவலைக்கிடம்
உலக சுகாதார நிறுவனத்தின் மாநாட்டின் போது கொரோனா வைரஸ் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க உலகின் பல நாடுகள் முடிவெடுத்துள்ளன.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதும் சீனா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
‘‘கொரோனாகுறித்து உண்மைகளை சீனா மறைத்துவிட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த, அமெரிக்க நிபுணர்கள் குழுவை சீனா அனுமதிக்க வேண்டும். கொரோனா விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை கண்டறிவோம். வைரஸை வேண்டுமென்றே சீனா பரப்பியிருந்தால், கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு சீனா பதில் சொல்லியாக வேண்டும். இழப்பீடு தந்தாக வேண்டும்’’ என்றுட்ரம்ப் ஆவேசமாக கூறினார்.
அவரது கருத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோவும் பல முறை கூறிவிட்டார்.
இந்நிலையில், ட்ரம்ப்புக்கு ஆதரவாக மற்ற நாடுகளும் தற்போது குரல் கொடுக்க தொடங்கிவிட்டன.
ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக தற்போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் டெர் லீயென் மற்றும் ஐரோப்பிய யூனியன் உட்பட பல தரப்பினரும் குரல் கொடுத்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் மாநாடு இன்னும் 10 நாட்களில் நடைபெற உள்ளது. அப்போது கொரோனா விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடுக்கு எதிராக அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகள் தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்துள்ளன.
அதன்படி தீர்மானத்தை தயாரிக்க பல நாட்டுத் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ், சுவீடன் சுகாதாரத் துறை அமைச்சர் லீனா ஹாலன்கிரன் உட்பட பல நாடுகளின் முக்கியபிரமுகர்கள் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதனால் உலக சுகாதார மாநாட்டின் போது சீனாவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று தெரிகிறது.