பெண்களுடன் எல்லைமீறி நடந்த ரௌடிகளை தேடி இரவிரவாக இராணுவம் வேட்டை!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடிகளை தேடி இராணுவத்தினர் நேற்று (8) இரவு திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், தலைமறைவாக உள்ள ரௌடிகள் சிலரை தேடி, பல வீடுகளிலும் இராணுவத்தினர் சோதனை செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்தில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சில இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை மீட்க சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் களமிறங்கினார் என பல செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த சம்பவத்தின் பின்னணி குறித்து எந்த தகவலும் வெளியாகியிருக்கவில்லை.
நாகர்கோவில் பகுதியில் அன்றைய தினம் மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்று பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டது. வீதியால் சென்ற சில இளம்பெண்களிடம் அத்துமீறி நடக்க முற்பட்டபோது, அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்ற இராணுவச்சிப்பாய்கள் இதனை அவதானித்துள்ளனர். இதேவேளை, சிப்பாய்களை கண்டதும், பெண்களும் அவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். ஒரு சிபபாய் விரைந்து சென்று, பெண்களுடன் எல்லை மீறி நடந்தவர்களை தட்டிக் கேட்டார். அங்கு வாய்த்தர்க்கம் முற்றி, இராணுவச்சிப்பாயை அந்த கும்பல் தாக்கியது. சிப்பாயின் கைடக்க தொலைபேசியையும் அவர்கள் பறித்து, பின்னர் ஒப்படைத்துள்ளனர்.
இராணுவச்சிப்பாய் தாக்கப்பட்ட விடயமறிந்ததும், இராணுவத்தினரும் பொலிசாரும் அந்த பகுதியை சுற்றிவளைத்து, ரௌடித்தனமாக செயற்பட்டவர்களை கைது செய்திருந்தனர்.
பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டபோது, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களிற்காக முன்னிலையாகினார். அந்த இளைஞர்களிற்காக எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானது நாகர்கோவில் பகுதியில் பலத்த அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த கும்பலுடன் தொடர்புபட்டவர்கள் வல்வெட்டித்துறையில் பதுங்கியிருந்தபோது, அங்கு வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
எனினும், மதுபோதையில் மோசமாக நடந்து கொண்ட பிரதான சந்தேகநபர் இதுவரை சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.
அவரை இலக்கு வைத்து நேற்று நாகர்கோவில் பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.