தமிழரசுக் கட்சியினர் பிரதமர் ராஜபக்ஷவிடம் சரணாகதியாகியுள்ளதற்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா….
தேர்தல் நெருங்கியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இழந்துள்ள அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தவும், அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவுமே தமிழரசுக் கட்சியினர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் சரணாகதியாகியுள்ளனரே தவிர காலம் கடந்த ஞானமாகக் கூட மக்களின் நலன்களுக்காக அவர்கள் இப்போதும் தம்மை மாற்றிக்கொள்ளவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் அழைப்பை ஏற்று அலரிமாளிகை சென்று பிரதமருடன் ஐக்கியமடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரது செயற்பாடுகள் குறித்து அமைச்சரிடம் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
தமிழ் மக்களின் பெயரால் குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பினரது ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு அரசியல் நடத்தியவர்கள் இன்று எமது அரசுடன் பேசவந்தது கபடத்தனமும் உள்நோக்கம் கொண்டதாகவுமே கருதப்படுகின்றது
கடந்த ஐந்து வருடங்கள் நல்லாட்சியை பார்த்த சாரதியாக இருந்து நடத்தியவர்கள் அத்தருணத்தில் எமது மக்களின் அன்றாடப் பிரச்சினை முதல் கொண்டு அரசியல் பிரச்சினை வரை பலவற்றை பெற்றுக்கொடுத்திருந்திருக்க முடியும்.
ஆனால் அப்போது எந்த நடவடிக்கைகளும் மேற்கோள்ளாது இருந்தனர். இன்று மக்களின் நலன் காக்க முயல்வதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இதைவிட 2008 ஆம் ஆண்டில் வன்னியில் இறுதி யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த தருணத்தில் இதே மகிந்த ராஜபக்ச அவர்கள் தான் இந்நாட்டின் அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருந்தார்.
அன்று இதே கூட்டமைப்பினரை அவர் பேச அழைத்தபோது மறுத்தார்கள், வாய்பொத்தி மெளனிகளாக இருந்தார்கள் இந்த கூட்டமைப்பினர்.
இவர்கள் அன்றும் இன்றுபோல நாட்டின் நிலைமையை உணர்ந்து இத்தகையதொரு நிலைப்பாட்டை எடுத்து இதே மக்களுக்காக பேசியிருந்தால், முடிந்துபோன முள்ளிவாய்க்கால் துயரம் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.
எமது மக்களின் வாழ்வியலையும் அவர்களது அபிலாஷைகளையும் முடியுமானவரை காப்பாற்றியிருந்திருக்கவும் முடிந்திருக்கும்.
ஆனால் தமிழ் மக்களின் நலன்களுக்காக கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தத்தமது சுயநலன்களுக்காக பயன்படுத்திய தமிழரசுக் கட்சியின் கூட்டத்தினர் இன்று கொரோனா என்ற தொற்றை காரணம் காட்டி பிரதமரை தரிசித்திருப்பது காலம் கடந்த ஞானம் போன்றது என்பதை விட கபடத்தனமும் உள்நோக்கம் கொண்டதாகவே கருதப்படுகின்றது
அதுமட்டுமல்லாது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீர்க்கதரிசனமும் அதன் அரசியல் வழிமுறையுமே தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வெற்றிகொள்ளும் வகையலான திடமான பாதை என்பதை இதர தமிழ் தரப்பினருக்கு மீண்டும் மீண்டும் வரலாறும் புதுப்பித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் சுயலாப அரசியல் தரப்பினரது அரசியல் சதுரங்கத்தை மக்கள் இனியும் நம்பத் தாயாரில்லை. மக்கள் இன்று நல்விழிப்புடன் உள்ளனர். அவர்கள் தமது எதிர்காலம் நோக்கிய சிந்தனையுடனேயே இன்று உள்ளார்கள்.
அதனால் அவர்கள் தத்தமது எதிர்கால வாழ்வின் நலன்கருதி வரவுள்ள சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.