அனுரவிடம் “பார் ஆளும்” விபரம் கேட்கிறார் சுமா!
சிவஞானம் சிறீதரனை தொடர்ந்து புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்துள்ளார்.
சந்திப்பில் புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சுமந்திரன், சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் பேசியதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளைப் பெற்று வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் மதுபானச் சர்ச்சை நிலவுகின்றது. இதனால் அந்தப் பட்டியலை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.
எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் சிபார்சு செய்து அதிகூடிய சாராயக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். அது தேர்தலுக்கு முன்பு தெரிய வந்தால்தான் அப்படியானவர்களை விலக்கி வைக்கலாம். மதுபானசாலைகளை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள், இரகசியமாக ஈடுபட்டவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அவர்களது பெயர்கள் தெரிய வேண்டும்.அது மட்டுமன்றி பணத்துக்கு ஆதாயமாக்கி அனுமதிப் பத்திரங்களை விற்றுள்ளனர் என்ற செய்தியும் எட்டியுள்ளது. ஆகையினால் அவர்கள் யார் என்பதை நாடறிய வெளிப்படுத்த வேண்டுமெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.