சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கவில்லை
சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கவில்லை. அக்கட்சியில் உள்ள சுமந்திரன் அணியினர் மட்டுமே ஆதரவு வழங்க்க்க்கியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி . வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில். தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரையில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் நாங்கள் இலங்கையர்களாகவே தேர்தல்களில் பங்கேற்று, வந்தோம். ஆனால் பெரும்பான்மையினர் எங்கள் வாக்குகளை பெற்று எங்களை அடக்கி ஆண்டு வந்தார்கள்.
அதனால் நாங்கள் இம்முறை சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கி உள்ளோம். அவர் ஜனாதிபதி ஆக மாட்டார். ஆனலும் நாங்கள் அதன் ஊடாக தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம்.
எனவே தமிழ் மக்கள் அனைவரும் தமிழர்களாக சிந்தித்து, எமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் செயற்பாடாக , தமிழ் பொது வேட்பாளருக்கு நமது முதல் வாக்கினை அளிக்க வேண்டும்
தமிழரசு கட்சியில் உள்ள சுமந்திரன் அணியை சேர்ந்த சுமார் 24 பேர் தான் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு தெரிவித்துள்னர்.
கட்சியின் தலைவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை அவர் அந்த கூட்டத்தில் எந்த தீர்மானங்களையும் எடுக்க வேண்டாம் என கூறிய போதிலும், அதனையும் மீறி தீர்மானம் எடுத்துள்ளனர்.
அதேபோல கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் சுமந்திரனை தோற்கடித்த சிறிதரன் நாட்டில் இல்லை. சார்ள்ஸ் நிர்மலநாதன் யோகேஸ்வரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
சுமந்திரன் தனக்கு சாதகமான சிலரை அழைத்து கூட்டத்தை நடாத்தி தீர்மானம் எடுத்துள்ளார்.
அவர்கள் எந்த முடிவை எடுத்து இருந்தாலும் , தமிழ் மக்கள் ஒற்றுமையாக சிந்தித்து , தமது வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என கோருகிறோம் என தெரிவித்தார்.