ரணிலின் பிழையான முகாமைத்துவமே கடவுச்சீட்டு வரிசைக்கு காரணம்.
கடவுச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரத்தை எந்த நிறுவனத்துக்கு வழங்குவது என ஜனாதிபதிக்கும் அவரது செயலாளருக்கும் இடையில் இருந்துவந்த முரண்பாடு காரணமாகவே கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறனர். ஜனாதிபதியின் முகாமைத்துவத்தை இதன் மூலம் மக்களுக்கு அறிந்துகொள்ள முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்ததபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீது இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் கடந்த சில தினங்களாக மக்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள இரவு பகலாக வரிசையில் இருந்து வருகின்றனர். பிழையான முகாமைத்துவம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2019இலும் இதுவே ,இடம்பெற்றது. பிழையான நபரை அதிகாரத்துக்கு காெண்டுவந்து, தவறான தீர்மானங்களை எடுத்ததால் நாடு வீழ்ச்சியடைந்தது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் வரை கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. ஒருநாள் சேவை மூலம் வரையறை இல்லாமல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. கடவுச்சீட்டுகளின் காலாவதியாகும் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆணையாளருக்கும் தெரியும்.
அப்படி இருந்தும் இதனை விநியோகிக்க ஏன் தாமதித்தார்கள். கையிருப்பில் ஒருதொகை கடவுச்சீட்டு இருக்கும்போதே இதனை விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
அத்துடன் கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைய பிரதான காரணமாக அமைந்திருப்பது, இதனை எந்த நிறுவனத்துக்கு வழக்குவதென்று, ஜனாதிபதிக்கும் அவரின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடாகும்.
இவர்களின் இழுபறியால் சாதாரண மக்களை பாதிக்கப்பட்டு, இரவு பகலாக வரிசையில் இருந்து வருகின்றனர். ஜனாதிபதியுன் முகாமைத்துவத்தை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அதனால் கடவுச்சீட்டுகளை சரியான முறையில் விநியோகிக்க முடியாத ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர மக்கள் ஒருபோதும் தீர்மானிக்கப்போவதில்லை என்றார்